/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வேம்பும் இனி 'இனிக்கும்!' நடவு செய்ய மானியம்
/
வேம்பும் இனி 'இனிக்கும்!' நடவு செய்ய மானியம்
ADDED : செப் 04, 2024 12:56 AM
கோவில்பாளையம்:'வேம்பு மற்றும் புங்கன் நடவு செய்ய மானியம் வழங்கப்படுகிறது' என, வேளாண் துறை தெரிவித்துள்ளது.
தரிசாக உள்ள நிலங்களில், எண்ணெய் வித்து மரப்பயிர்களான வேம்பு மற்றும் புங்கன் நடவு செய்ய தேசிய உணவு எண்ணெய் பாதுகாப்பு திட்டத்தின் வாயிலாக மானியம் வழங்கப்படுகிறது. 2023- -24ம் ஆண்டில், கோவை மாவட்டத்தில், 13 எக்டேர் பரப்பளவில், இரண்டு லட்சத்து 24 ஆயிரம் வேம்பு நடவு செய்ய, இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஒரு எக்டேருக்கு 400 வேம்பு மரக் கன்றுகள் என்ற அளவில், புதிதாக நடவு செய்ய, 17 ஆயிரம் ரூபாய் மானியம் வழங்கப்படுகிறது. மேலும் கூடுதலாக நடவு செய்த முதல் மூன்று ஆண்டுகளுக்கு ஊடுபயிர் மற்றும் பராமரிப்பு மானியமாக ஒரு எக்டேருக்கு, 3,000 ரூபாய் மானியம் வழங்கப்படுகிறது.
இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள், உழவன் செயலி வாயிலாக பதிவு செய்யலாம்; அல்லது எஸ்.எஸ்.குளம் வட்டார வேளாண் உதவி இயக்குனரை தொடர்பு கொண்டு பதிவு செய்யலாம்.
'சர்வரோக நிவாரணி' என்று அழைக்கப்படும் வேம்பின் இலை, பூ, பழம், பட்டை, வேர் மற்றும் புண்ணாக்கு என, அனைத்தும் பயன்படுகிறது. மண் அரிப்பு ஏற்படாமல் உதவுகிறது.
எனவே மத்திய, மாநில அரசுகள் வேம்பு மற்றும் புங்கன் நடவு செய்ய மானியம் வழங்குகின்றன. இது விவசாயிகளுக்கு பயனுள்ளதாக அமையும்.