/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நெட் ஒர்க் பிரச்னை வாடிக்கையாளர்கள் பரிதவிப்பு
/
நெட் ஒர்க் பிரச்னை வாடிக்கையாளர்கள் பரிதவிப்பு
ADDED : ஆக 10, 2024 03:10 AM
வால்பாறை;தபால்நிலையங்களில் ஏற்பட்ட நெட் ஒர்க் பிரச்னையால், வாடிக்கையாளர்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.
வால்பாறை மலைபகுதியில், ஆறு துணை அஞ்சலகங்கள், 22 கிளை அஞ்சலகங்கள் உட்பட, மொத்தம் 28 தபால் நிலையங்கள் உள்ளன.
இந்நிலையில், வால்பாறை அடுத்துள்ள சோலையாறுநகர், கருமலை, சின்கோனா உள்ளிட்ட பகுதிகளில், கடந்த சில மாதங்களாக நெட் ஒர்க் பிரச்னையால், வாடிக்கையாளர்கள் பணம் எடுக்கவும், செலுத்தவும் முடியாமல் தவிக்கின்றனர்.
பொதுமக்கள் கூறியதாவது:
வால்பாறையில் உள்ள தபால் நிலையங்களில், பி.எஸ்.என்.எல்., நெட் ஒர்க் பிரச்னையால், வாடிக்கையாளர்கள் பல்வேறு சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.
அவசரத்தேவைக்கு பணம் எடுக்க முடியாமலும், இன்சூரன்ஸ், செல்வமகள் சேமிப்பு திட்டம், டெபாசிட் உள்ளிட்ட கணக்குகளில் பணம் செலுத்த முடியாமல், நாள் கணக்கில் திரும்பிச்செல்ல வேண்டிய நிலை உள்ளது.
தபால் நிலையங்களில் கடந்த பல மாதங்களாக நிலவும் நெட் ஒர்க் பிரச்னைக்கு, சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, தெரிவித்தனர்.
தபால் துறை அதிகாரிகள் கூறியதாவது:
வால்பாறையில் பரவலாகவே நெட் ஒர்க் பிரச்னை அடிக்கடி ஏற்படுகிறது. குறிப்பாக சோலையாறு நகர், கருமலை உள்ளிட்ட சில அஞ்சலகங்களில் இந்த பிரச்னை தொடர் கதையாகவே உள்ளது. பி.எஸ்.என்.எல்., நெட் ஒர்க் பிரச்னைக்கு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.

