/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கட்டமைப்புகள் பராமரிப்பில்லை மழைநீர் சேகரிப்பில் அலட்சியம்
/
கட்டமைப்புகள் பராமரிப்பில்லை மழைநீர் சேகரிப்பில் அலட்சியம்
கட்டமைப்புகள் பராமரிப்பில்லை மழைநீர் சேகரிப்பில் அலட்சியம்
கட்டமைப்புகள் பராமரிப்பில்லை மழைநீர் சேகரிப்பில் அலட்சியம்
ADDED : மே 24, 2024 10:46 PM
உடுமலை, - பருவ மழையை, சேமிக்கும் வகையில், மழைநீர் சேகரிப்பு திட்டங்களை முழுமையாக செயல்படுத்த வேண்டும்.
பருவமழை தவறும்போது நீராதாரங்கள் வறண்டு, தண்ணீருக்கு தட்டுப்பாடு ஏற்படும் நிலை ஏற்படுகிறது. இதனை தவிர்க்கும் வகையில், பருவ மழை பெய்யும் போது, அதனை முழுமையாக சேமிக்கும் வகையில், குளம், குட்டைகளை துார்வாரி, தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.
அதே போல், நிலத்தடி நீர்மட்டத்தை மேம்படுத்தும் வகையில், வீடுகள், வணிக நிறுவனங்கள், பள்ளி, கல்லுாரி வளாகங்கள், கோவில்கள் அரசு அலுவலகங்கள், தொழிற்சாலைகளில் மழை நீர் சேகரிப்பு கட்டமைப்பு கட்டாயமாக்கப்பட்டது.
தொடர்ந்து இத்திட்டம் குறித்து அதிகாரிகள் கண்டு கொள்ளாததால், அரசு அலுவலகங்களில் அமைக்கப்பட்ட மழை நீர் சேகரிப்பு கட்டமைப்புகள் சிதிலமடைந்து வீணாக உள்ளது.
வீடுகள், வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகளில் கட்டாயமாக்கப்பட்டு, கட்டட அனுமதி, சொத்து வரி விதிப்பின் போது, சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகள் உறுதி செய்ய வேண்டும்.
ஆனால், மழை நீர் சேகரிப்பு குறித்தும், நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்தும் இத்திட்டத்தை முழுமையாக செயல்படுத்துவது குறித்தும் அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை.
கடந்தாண்டு, பருவ மழை பொய்த்து, கடும் வறட்சியும், வெயிலின் தாக்கமும் அதிகரித்தது. குளம், குட்டைகள் வறண்டு, விவசாயமும் கடுமையாக பாதிக்கப்பட்டதோடு, தென்னை உள்ளிட்ட நிலைப்பயிர்களும் காய்ந்தன.
நிலத்தடி நீர் மட்டம் அதல பாதாளத்திற்கு சென்று, 2 ஆயிரம் அடி வரை, போர்வெல் அமைத்தும் பயனில்லை.
தற்போது கோடை மழை துவங்கியுள்ளதோடு, அடுத்து வரும் தென்மேற்கு பருவ மழையும் கூடுதலாக கிடைக்கும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. எனவே, கிடைக்கும் மழை நீரை சேமிக்கும் வகையிலும், நிலத்தடி நீர் மட்டத்தை பாதுகாக்கும் வகையில், குளம், குட்டைகளை துார்வாரவும், கட்டடங்களில் அமைக்கப்பட்டுள்ள, மழை நீர் சேகரிப்பு கட்டமைப்புகளை புதுப்பிக்கவும், அதிகாரிகளும், பொதுமக்களும் முன் வர வேண்டும்.
நகராட்சி உள்ளிட்ட அனைத்து உள்ளாட்சி நிர்வாகங்களும், மழைநீர் சேகரிப்பில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.

