/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சத்துள்ள உணவுப் பொருள்; கர்ப்பிணிகளுக்கு அறிவுரை
/
சத்துள்ள உணவுப் பொருள்; கர்ப்பிணிகளுக்கு அறிவுரை
ADDED : பிப் 24, 2025 12:44 AM

அன்னுார்; 'கர்ப்பிணிகள், கீரை வகைகளை, அதிகமாக உட்கொள்ள வேண்டும்,' என சமுதாய வளைகாப்பில் தெரிவிக்கப்பட்டது.
ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் சார்பில், சமுதாய வளைகாப்பு, நேற்று முன்தினம் அன்னுார், வெள்ளி விழா மண்டபத்தில் நடந்தது.
இதில் நூறு கர்ப்பிணிகளுக்கு, சேலை, சில்வர் தட்டு, கிண்ணம், குங்குமச்சிமிழ், பழ வகைகள், வளையல்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்பட்டது.
எலுமிச்சை, தக்காளி, தேங்காய், புதினா, தயிர் உள்ளிட்ட ஐந்து வகை சாதங்களும், வடை பாயாசத்துடன், உணவும் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் திட்ட அலுவலர் ரூபா பேசுகையில், ''கர்ப்பிணிகள் ஒவ்வொரு மாதமும் மருத்துவ பரிசோதனைக்கு செல்ல வேண்டும்.
இரும்புச்சத்து அதிகம் உள்ள உணவுகளை உட்கொள்ள வேண்டும். குறிப்பாக முருங்கைக் கீரை, பசலைக்கீரை, பருப்பு கீரை, கறிவேப்பிலை, முட்டை ஆகியவற்றை உட்கொள்ள வேண்டும். எடை அதிகரிப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். மனதை கவலையின்றி மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ள வேண்டும்,'' என்றார்.
நிகழ்ச்சியில் சத்தான உணவுப் பொருட்களின் கண்காட்சி நடந்தது. பொருட்களின் பயன்கள் குறித்த விளக்கமும் தெரிவிக்கப்பட்டது. கோவில்பாளையத்தில், சர்க்கார் சாம குளம் வட்டார அளவில், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப் பணிகள் திட்டத்தின் கீழ், நூறு கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு நடத்தும் விழா நேற்று முன்தினம் நடந்தது. விழாவில், கர்ப்பிணி பெண்களுக்கு சேலை, எவர்சில்வர் தட்டு, கிண்ணம், பழ வகைகள், குங்குமம், அறுசுவை உணவு வழங்கப்பட்டது.
கர்ப்பிணிப் பெண்கள் பின்பற்ற வேண்டிய நடைமுறை குறித்து குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர், ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் பேசினர். சத்தான உணவுகளின் கண்காட்சி நடந்தது.

