/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பூவோடு ஏந்தி அம்மனுக்கு நேர்த்திக்கடன்
/
பூவோடு ஏந்தி அம்மனுக்கு நேர்த்திக்கடன்
ADDED : மார் 04, 2025 09:51 PM

மாரியம்மன் கோவில் திருவிழாவில், மூன்றாம் செவ்வாய் அன்று இரவு ஒரு பெரிய மண்சட்டியில் பூ வளர்த்து அதனை ஏந்தியவாறு கோவிலை வலம் வந்து பூஜை செய்து, பூச்சட்டியை கம்பத்தில் வைப்பர். இந்த பூவோடு எடுப்பது கோவிலின் ஐதீகமாக கடைபிடிக்கப்படுகிறது.
அதன்பின், வெள்ளிக்கிழமை இரவு கிராம சாந்தி செய்து சனிக்கிழமை காலை கொடியேற்றம் நிகழும்.அதன்பின் ஒவ்வொரு நாளும் மாலை, 6:00 மணி முதல் இரவு, 11:00 மணி வரையிலும் நகரின் பல்வேறு பகுதியில் இருந்தும் வீதிகள் தோறும், பக்தர்கள் பூவோடு ஏந்தி, அம்மனை நோக்கி ஊர்வலமாக வருகின்றனர்.
நோய் நீக்கவும், குடும்பம் செழிக்கவும், மழை பெய்யவும் வேண்டி, நேர்த்திக்கடன் வைத்து பக்தர்கள் பூவோடு எடுக்கின்றனர். பூவோடு ஊர்வலத்தின் போது, அலங்கரிக்கப்பட்ட தேரில் அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
மேலும், குழந்தைகள் அம்மன் வேடமிட்டு ஊர்வலத்தில் பங்கேற்கின்றனர். ஒவ்வொரு பகுதியில் இருந்தும் விரதம் இருக்கும் பக்தர்கள், நேர்த்திக்கடனை செலுத்தி பூவோடு எடுத்து வரும் போது, கரகம், தெருக்கூத்து, கும்மி என, தமிழ் மண்ணின் பண்டைய கலைகள் பூவோடு நாட்களில் புத்துயிர் பெறுகின்றன.
பூவோடு ஊர்வலம் மாலையில் துவங்கி, இரவு வரை நடக்கும் போது, வழியெங்கும் பக்தர்களுக்கு நீர் மோர், இனிப்பு வழங்கி மக்கள் பண்டிகையை கொண்டாடுகின்றனர்.
மாலையில் மட்டுமின்றி, ஆதவன் உதிக்கும் நேரத்திலும், பக்தர்கள் பூவோடு அடுத்து அம்மனை வழிபடுகின்றனர். பல பகுதியில் இருந்து பூவோடு எடுத்து வந்ததும், கோவிலில் அம்மனை வலம் வந்து, தெப்பக்குளத்தின் கரையில் பூவோடுகளை இறக்குகின்றனர்.
மாவிளக்கு வழிபாடு
திருவிழாவில் தேரோட்டம் துவங்கும் நாளான புதன்கிழமை காலை ஆயிரக்கணக்கான பெண்கள், குழந்தைகளுடன், மாவிளக்கு ஏந்தி வந்து அம்மனுக்கு படைத்து மகிழ்வர்.
இடித்த பச்சரிசி மாவு, வெல்லப் பாகு கலந்து மாவு உருண்டையாக்கி, அதில் வாசனைக்காக ஏலக்காய் சேர்ப்பதும் உண்டு. திரண்ட மாவினை உருண்டையாகப் பிடித்து, அதன் நடுவே நெய் ஊற்றி திரியிட்டு விளக்கேற்றுகின்றனர். திருவிழா நாட்களில் அவரவர் வீட்டில் செய்த மாவிளக்கை ஊர்வலமாக கோவிலுக்கு எடுத்துச் சென்று வழிபாடு நடத்தப்படுகிறது. குடும்பத்தில் திருமணம், கிரகப்பிரவேசம், சீமந்தம் போன்ற மங்கள நிகழ்ச்சிகள் நடக்கும் முன்பும், இதுபோன்று பிரார்த்தனை செய்வதால், நிகழ்ச்சிகள் தடங்கலின்றி நடக்கும் என ஆன்மிக பெரியோர்கள் கூறுகின்றனர். மேலும், நோய்களின்றி காக்க இந்த மாவிளக்கு வழிபாடு செய்வதாக கூறப்படுகிறது.
மாவிளக்கு எடுத்து வர ஆர்வம் காட்டும் பெண்கள், அம்மனை தரிசனம் செய்து, குறைகளின்றி காத்திடுவாய் தாயே, மன மகிழ்ச்சியையும், ஆரோக்கியத்தையும் கொடுப்பாய் தாயே...! என மனமுருகி வேண்டுதல் வைக்கின்றனர். அம்மனும் அருள்புரிகிறாள்.