/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
25 சதவீத இடஒதுக்கீடு பள்ளிகளில் அறிவிக்க உத்தரவு
/
25 சதவீத இடஒதுக்கீடு பள்ளிகளில் அறிவிக்க உத்தரவு
ADDED : ஏப் 09, 2024 11:29 PM
கோவை:இலவச, கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ், 25 சதவீத இட ஒதுக்கீட்டில் இலவச கல்வி பெறுவது தொடர்பான விவரங்களை, தனியார் பள்ளிகள் தங்களது அறிவிப்புப் பலகையில் வெளியிட வேண்டும் என, பள்ளிக் கல்வித்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ், 2024--25ம் கல்வி ஆண்டுக்கான 25 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ், தனியார் சுயநிதி பள்ளிகளில் எல்.கே.ஜி., 1ம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கு, வரும் 22 முதல் மே 20ம் தேதி வரை, ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என, தமிழக அரசு அறிவித்துள்ளது.
விண்ணப்பதாரர்கள், rte.tnschools.gov.in என்ற இணைய வழியாகவோ, முதன்மைக் கல்வி அலுவலகம், மாவட்டக் கல்வி அலுவலகங்கள், வட்டாரக் கல்வி அலுவலகங்கள், ஒருங்கிணைந்த வட்டார வளமைய அலுவலகங்களிலோ, கட்டணமின்றி விண்ணப்பிக்கலாம்.
இந்நிலையில், 25 சதவீத இட ஒதுக்கீட்டின்படி, தகுதியான இடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படும் விவரத்தை, தனியார் பள்ளிகள் தங்களது அறிவிப்பு பலகையில் இடம்பெறச் செய்ய வேண்டும் என, பள்ளிக் கல்வித்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

