/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அரசு நலத்திட்ட உதவிகளுக்காக ஜமாபந்தியில் மனு
/
அரசு நலத்திட்ட உதவிகளுக்காக ஜமாபந்தியில் மனு
ADDED : ஜூன் 25, 2024 11:42 PM

பொள்ளாச்சி:பொள்ளாச்சி வருவாய் கோட்டத்துக்கு உட்பட்ட பொள்ளாச்சி, ஆனைமலை பகுதியில் நடந்த ஜமாபந்தியில் மொத்தம், 541 மனுக்கள் பெறப்பட்டன.
பொள்ளாச்சி வருவாய் கோட்டத்துக்கு உட்பட்ட பொள்ளாச்சி, ஆனைமலை, வால்பாறை தாலுகாக்களில் ஜமாபந்தி நடைபெற்று வருகிறது. இதில், வால்பாறை தாலுகாவில், ஒரே ஒரு உள்வட்டம் மட்டுமே என்பதால், ஒரே நாளில் நிறைவடைந்தது.
பொள்ளாச்சி
பொள்ளாச்சி தாலுகாவில், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் முருகேசன் தலைமையில், பொள்ளாச்சி தெற்கு உள்வட்டத்துக்கான ஜமாபந்தி நடந்தது. தாசில்தார் ஜெயசித்ரா, மண்டல துணை தாசில்தார் பட்டுராஜா மற்றும் வருவாய்துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.
அதில், பட்டா மாறுதல் - 25, இலவச வீட்டுமனை பட்டா கோருதல் - 93, நத்தம் பட்டா மாறுதல் - 11, நில அளவை - 32, கலைஞர் மகளிர் உரிமை திட்டம் - 23 உள்ளிட்ட மொத்தம், 223 மனுக்கள் நேற்று வரப்பெற்றன.
நெகமம் உள்வட்டத்துக்கு உட்பட்ட கள்ளிப்பட்டி, பெரிய நெகமம், சந்திராபுரம், சின்ன நெகமம், மூலனுார், கொண்டேகவுண்டன்பாளையம், ஆவலப்பம்பட்டி, ஆ. நாகூர், கொல்லப்பட்டி, போலி கவுண்டம்பாளையம், ஏரிப்பட்டி, திப்பம்பட்டி, பூசாரிப்பட்டி கிராமங்களுக்கு இன்று ஜமாபந்தி நடக்கிறது.
ஆனைமலை
ஆனைமலை தாலுகா அலுவலகத்தில் சப் - கலெக்டர் கேத்திரின் சரண்யா தலைமையில் ஜமாபந்தி நடந்தது. தாசில்தார் சிவக்குமார் மற்றும் வருவாய்துறை அதிகாரிகள் பங்கேற்றனர். இறுதி நாளான நேற்று கோட்டூர் உள்வட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளுக்கு நடைபெற்றது.
பட்டா மாறுதல் - 18, முதியோர் உதவித்தொகை - 16, வீட்டு மனைப்பட்டா கோருதல் - 115, கலைஞர் மகளிர் உரிமைத்திட்டம் - 60 உள்ளிட்ட பல்வேறு மனுக்கள் என மொத்தம், 318 மனுக்கள் வரப்பெற்றன.
இதில், வீட்டு மனைப்பட்டா - 3, பட்டா உரிமை சான்று - 3, பழங்குடியினர் ஜாதிச்சான்று - 12, ரேஷன் கார்டு - 26 என மொத்தம், 44 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
மூன்று நாட்கள் நடந்த ஜமாபந்தியில், 571 மனுக்கள் வரப்பெற்றன. அதில், 50 மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டது. மீதம் உள்ள மனுக்கள் மீது விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என வருவாய்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
கிணத்துக்கடவு
கிணத்துக்கடவு, தாலுகா அலுவலகத்தில் நேற்று ஜமாபந்தி நடந்தது. இதில், தாட்கோ மாவட்ட மேலாளர் மகேஸ்வரி, கிணத்துக்கடவு தாசில்தார் சிவகுமார் மற்றும் அதிகாரிகள் பலர் பங்கேற்றனர்.
கோவில்பாளையம் உள்வட்டதுக்கு உட்பட்ட கிராம மக்கள் மனு அளித்தனர். இதில், மொத்தம் 259 மனுக்கள் பெறப்பட்டது. நேற்றுடன் ஜமாபந்தி நிறைவு பெற்றது.
கிணத்துக்கடவு தாலுகாவில் நடந்த ஜமாபந்தியில், வடசித்தூர் உள்வட்டத்தில் - 145, கிணத்துக்கடவு உள்வட்டத்தில் - 489 மற்றும் கோவில்பாளையம் உள்வட்டத்தில் - 259 மனுக்கள் என, மொத்தம், 893 மனுக்கள் பெறப்பட்டன.