/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
விசுவாசபுரம் சாலை முழுவதும் பள்ளம், மேடுகள்! மழைநீர் சாக்கடை புகுந்து நாறுகின்றன வீடுகள்
/
விசுவாசபுரம் சாலை முழுவதும் பள்ளம், மேடுகள்! மழைநீர் சாக்கடை புகுந்து நாறுகின்றன வீடுகள்
விசுவாசபுரம் சாலை முழுவதும் பள்ளம், மேடுகள்! மழைநீர் சாக்கடை புகுந்து நாறுகின்றன வீடுகள்
விசுவாசபுரம் சாலை முழுவதும் பள்ளம், மேடுகள்! மழைநீர் சாக்கடை புகுந்து நாறுகின்றன வீடுகள்
ADDED : மே 27, 2024 02:08 AM

சுகாதார சீர்கேடு
வெள்ளக்கிணறு, சமத்துவபுரம் செல்லும் வழியில், சாலையோரத்தில் பெருமளவு குப்பை குவிந்து கிடக்கிறது. பல வாரங்களாக தேங்கியுள்ள கழிவுகளால், சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. குப்பையை அகற்றுவதுடன், மீண்டும் இப்பகுதியில் குப்பை கொட்டாமல் இருக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- நிவேதா, வெள்ளக்கிணறு.
மோசமான சாலை
சரவணம்பட்டி, விசுவாசபுரம், தமிழ் சர்ச் வீதி ஒன்று முதல் நான்கு மற்றும் அன்னை நகர் வீதி சாலைகள், போக்குவரத்துக்கே தகுதியற்றவையாக உள்ளன. ஆங்காங்கே பள்ளமாக இருக்கும் சாலையில், மழைநீர் குளம் போல தேங்குகிறது. மழைநீருடன், சாக்கடையும் சேர்ந்து, வீடுகளுக்குள் வருவதால், மக்கள் அவதிக்குள்ளாகின்றனர்.
- கார்த்திக், சரவணம்பட்டி.
யார் தலையில் விழுமோ?
பீளமேடுபுதுார், ஆர்.டி.ஓ., ஆபீஸ் எதிரில் உள்ள மரம் மிகவும் வலுவிழந்து, சாய்ந்த நிலையில் உள்ளது. ஆபத்தான நிலையில் உள்ள மரம், எப்போது வேண்டுமானாலும் விழலாம். உயிரிழப்புகள் நிகழ வாய்ப்புள்ளதால், மரத்தை பாதுகாப்பாக அப்புறப்படுத்த வேண்டும்.
- யுவராஜ், திருமகள்நகர்.
ஆபத்தான பழைய கட்டடம்
காந்திபுரம், இரண்டாவது வீதியில், பயன்பாடற்ற கட்டடம் மிகவும் பாழடைந்து இடியும் நிலையில் உள்ளது. இந்த கட்டடத்தின் முன், சிலர் குப்பை வீசிச்செல்கின்றனர். இதனால், அருகிலுள்ள குடியிருப்பு பகுதியில், சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.
- செல்வஸ்ரீ, காந்திபுரம்.
சாய்ந்து நிற்கும் மின்கம்பம்
பீளமேடு, பாரதி காலனி, மூன்றாவது வீதியில், பழுதடைந்த மின்கம்பம் ஒன்று சாய்ந்த நிலையில் உள்ளது. எப்போது வேண்டுமானாலும் விழும் நிலையில் உள்ள கம்பத்தால், மின்விபத்துகள் நடக்க வாய்ப்புள்ளது. விரைந்து கம்பத்தை அகற்ற வேண்டும்.
- ஆனந்த், பீளமேடு.
திறந்தநிலை சாக்கடை
போத்தனுார், எம்.ஜி.ஆர்.நகர், புது வீதியில் மண் சாலையில் மழைநீர் தேங்கி சேறும், சகதியுமாக இருக்கிறது. சாக்கடை கால்வாயின் மூடி உடைந்து, திறந்த நிலையில் உள்ளது. குழந்தைகள் மட்டுமின்றி, பெரியவர்களும் விழுவதற்கு வாய்ப்புள்ளது. அதற்கு முன், சிலாப் கொண்டு மூட வேண்டும்.
- ஆண்டனி, போத்தனுார்.
நாய் தொல்லை
தொண்டாமுத்துார், ராமசாமி நகரில், 15க்கும் மேற்பட்ட நாய்கள் சுற்றுகின்றன. முதியவர்கள், குழந்தைகள் தெருவில் நடக்கவே அஞ்சுகின்றனர். நடந்து செல்வோரையும், வாகனங்களில் செல்வோரையும் நாய்கள் துரத்தி மிரட்டுகின்றன.
- தீபக், செல்வபுரம்.
குழியால் விபத்து
சவுரிபாளையம், கண்ணாபிரான் மில் ரோட்டில், சாலை நடுவே பெரிய குழி உள்ளது. வாகனஓட்டிகளுக்கு ஆபத்தாக உள்ள இக்குழியை, உடனடியாக மூட வேண்டும். இரவு நேரங்களில், குழி தெரியாமல் பலர் விபத்தில் சிக்குகின்றனர்.
- விஜய், சவுரிபாளையம்.
சாக்கடை அடைப்பு
சங்கனுார் - நல்லாம்பாளையம் ரோடு, சிவல்புரி அம்மன் நகரில், பல மாதங்களாக சாக்கடை துார்வாரவில்லை. குப்பையால் சாக்கடை கால்வாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. கழிவுநீர் நிரம்பி, சாலையில் வழிந்தோடுகிறது. இதனால், குடியிருப்பு பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுகிறது.
- ரோகித், சங்கனுார்.
கழிவுநீர் தேக்கம்
செல்வபுரம், ஐ.யு.டி.பி.,காலனியில், சரியாக துார்வாராத சாக்கடையில், பல மாதங்களாக கழிவுநீர் தேங்கி நிற்கிறது. கொசு உற்பத்தி அதிகமாக இருப்பதுடன், சுகாதார சீர்கேடும் ஏற்படுகிறது. இதுகுறித்து பத்துக்கும் மேற்பட்ட முறை, புகார் செய்தும் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
- சீனுவாசன், செல்வபுரம்.
நிரம்பி வழியும் தொட்டி
உப்பிலிபாளையம், பிருந்தாவன் காலனி, 60வது வார்டில், மாநகராட்சி பள்ளி அருகில், தொட்டியில் குப்பை நிரம்பி வழிகிறது. பாதி சாலை வரையிலும், குப்பை சிதறிக்கிடக்கிறது. பள்ளிகள் திறக்கப்படவுள்ள நிலையில், குப்பையை அகற்றுவதுடன், தொட்டியை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும்.
- கோபாலன், உப்பிலிபாளையம்.

