ADDED : ஜூலை 28, 2026 06:10 PM
கோவை: 81வது வார்டில் உள்ள கருப்பண்ண கவுண்டர் அரசு நடுநிலைப்பள்ளியில், 100 க்கும் மேற்பட்டோர் பயில்கின்றனர். அப்பகுதியில் உள்ள பழக்கடைகளின் குப்பையை பள்ளி அருகில் கொட்டுவது வழக்கமாக இருந்தது.
மாநகராட்சி சுகாதார பிரிவு அதிகாரிகள் பலமுறை எச்சரித்தும், அபராதம் விதித்தும் குப்பை கொட்டுவது நிற்கவில்லை. கருப்பண்ண கவுண்டர் ரோடு முழுவதும் சுத்தம் செய்து, குப்பை கொட்டக் கூடாது என்று மாநகராட்சி நிர்வாகம் போர்டு வைத்துள்ளது.
பழ வியாபாரிகளிடம் ரோஜாப்பூ கொடுத்து குப்பை கொட்ட வேண்டாம் என பள்ளி மாணவர்களும் கேட்டுக்கொண்டனர்.
மாணவர்களின் செயலால் நெகிழ்ந்த வியாபாரிகள், ‘இனிமேல் குப்பை கொட்ட மாட்டோம். மற்றவர்கள் குப்பை கொட்டவும் விட மாட்டோம்’ என்று உறுதியளித்தனர்.
இந்நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியர் குணசுந்தரி, மத்திய மண்டல சுகாதார அலுவலர் குணசேகரன், 81வது மேற்பார்வையாளர் பரமசிவம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
