
விபத்தில் இருவர் பலி
மீனாட்சிபுரம் அடுத்த முத்துசாமிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ், 21, மரம் ஏறும் தொழிலாளி. இவர் தனது அண்டை வீட்டில் வசிக்கும், பள்ளி மாணவன் ஜீவா, 16, என்பவரை அழைத்துக் கொண்டு, பொள்ளாச்சிக்கு பைக்கை சர்வீஸ் செய்வதற்காக சென்றார்.
ஜமீன் முத்துாரில், டி.நல்லிக்கவுண்டன்பாளையம் பிரிவு அருகே சென்றபோது, கேரளாவில் இருந்து தீவனம் ஏற்றி வந்த லாரியில் மோதி விபத்துக்குள்ளாயினர். இவ்விபத்தில் ரமேஷ், ஜீவா இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
பொள்ளாச்சி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து, பாலக்காட்டைச் சேர்ந்த லாரி டிரைவர் சிவராஜிடம் விசாரிக்கின்றனர்.
விபத்தில் தொழிலாளி காயம்
கிணத்துக்கடவு, சங்கராயபுரத்தை சேர்ந்தவர் துரைசாமி, 65. இவர், வேலைக்கு செல்ல கிணத்துக்கடவு பழைய பஸ் ஸ்டாப்பில் பஸ்சுக்காக காத்திருந்தார். அப்போது ரத்தினம் என்பவர் ஓட்டி வந்த, கோவை தனியார் கல்லுாரி பஸ், அங்குள்ள பஸ் ஸ்டாப்பில் நின்றுகொண்டிருந்த துரைசாமி மீது மோதியது. இதில், காயமடைந்த துரைசாமியை அருகில் இருந்தவர்கள் சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதுகுறித்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
வாலிபர் துாக்கிட்டு தற்கொலை
கிணத்துக்கடவு, குருநல்லிபாளையத்தை சேர்ந்தவர் திருமூர்த்தி, 25. இவர், சென்னையில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தார். இவர், தேர்தலுக்காக சொந்த ஊருக்கு வந்தார். அதன்பின் வேலைக்கு செல்லவில்லை.
இவரது குடும்பத்தில் சில பிரச்னைகள் இருந்ததால், மன உளைச்சலில் இருந்துள்ளார். இதை தொடர்ந்து வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், வீட்டின் விட்டத்தில் சேலையில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இவரது பெற்றோர் மற்றும் அருகில் உள்ளவர்கள் உடனடியாக கிணத்துக்கடவு போலீசார், பிரேதத்தை மீட்டு, உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். கிணத்துக்கடவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.