
மின்சாரம் தாக்கி லைன்மேன் பலி
வால்பாறை அடுத்துள்ள, வாகமலை எஸ்டேட் பகுதியை சேர்ந்தவர் கருப்பசாமி,45. இவர் வால்பாறை மின் வாரியத்தில் லைன்மேனாக பணிபுரிந்து வந்தார். நேற்று மாலை, 4:15 மணிக்கு, புதிய பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள மின்மாற்றியில் லைன் மாற்றி கொடுக்கும் போது, எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியதில் துாக்கி வீசப்பட்டார்.
அவரை மீட்டு, வால்பாறை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதனையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டது. இது குறித்து, வால்பாறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விபத்தில் தொழிலாளி பலி
கிணத்துக்கடவு, வடசித்தூர் சமத்துவபுரத்தை சேர்ந்தவர் முருகன், 35. இவர், கோதவாடி ரோட்டில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தார். நேற்று இரவு வேலை முடித்து கோதவாடி - கொண்டம்பட்டி ரோட்டில் பைக்கில் சென்றார். அப்போது, நிலை தடுமாறி கீழே விழுந்ததில் தலையில் படுகாயம் ஏற்பட்டு மயக்க நிலையில் ரோட்டில் கிடந்தார். அவ்வழியில் சென்றவர்கள், அவரை கவனித்து ஆம்புலன்ஸ் வாயிலாக, பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முருகனை பரிசோதித்த மருத்துவர்கள், இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து, கிணத்துக்கடவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
மனைவி தற்கொலை; கணவனுக்கு சிகிச்சை
கிணத்துக்கடவு, அரசம்பாளையத்தை சேர்ந்த தம்பதி கந்தசாமி, 87, மயிலாத்தாள், 70. இவர்களுக்கு இரண்டு பெண்கள் மற்றும் ஒரு ஆண் வாரிசு உள்ளது.
கடந்த ஐந்து ஆண்டுகளாக, கந்தசாமி உடல் நிலை பாதித்துள்ளார். இந்நிலையில், இவரது மனைவி மயிலாத்தாள் இவரை கவனித்து வந்தார். இவருக்கும் கடந்த இரண்டு ஆண்டுகளாக, உடல் நிலை சரி இல்லாத காரணத்தால் மனமுடைந்து, சாணி பவுடரை தண்ணீரில் கலந்து மயிலாத்தாள் குடித்துவிட்டு, தனது கணவருக்கும் கொடுத்துள்ளார்.
இதை கவனித்த கந்தசாமி கூச்சலிட்டு சப்தம் போட்டுள்ளார். அருகில் உள்ளவர்கள் ஆம்புலன்ஸ்க்கு போன் செய்தனர். ஆம்புலன்ஸ் வரும் முன்னே மயிலாத்தாள் இறந்தார். கந்தசாமியை கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார். கிணத்துக்கடவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.