/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
காவல்துறையினர் சுயமாக செயல்படணும்: வேலுமணி
/
காவல்துறையினர் சுயமாக செயல்படணும்: வேலுமணி
ADDED : ஏப் 30, 2024 11:51 PM
கோவை;''வழிப்பறி, திருட்டு, கொள்ளை சம்பவங்களை தடுக்க, காவல்துறை சுயமாக செயல்பட வேண்டும்,'' என, முன்னாள் அமைச்சர் வேலுமணி வலியுறுத்திஉள்ளார்.
கோவையில், கடந்த, 22ம் தேதி இரு சக்கர வாகனத்தில் சென்ற தங்க நகை பட்டறை உரிமையாளர் ராஜேந்திரன் மற்றும் ஊழியர் சாந்தகுமார் ஆகியோரை, காரில் வந்த கும்பல் தாக்கி, 33 பவுன் நகைகளை கொள்ளையடித்துச் சென்றது. பாதிக்கப்பட்டோரை, முன்னாள் அமைச்சர் வேலுமணி நேற்று சந்தித்து ஆறுதல் கூறினார்.
அதன்பின், வேலுமணி நிருபர்களிடம் கூறியதாவது:
காந்திபார்க், செல்வபுரம் சுற்றியுள்ள பகுதிகளில் தங்க நகை பட்டறை அமைத்து, குடிசை தொழில் போல் செய்து வருகின்றனர். பல ஊர்களில் இருந்து, நகை கடை உரிமையாளர்களிடம் இருந்து ஒப்பந்த முறையில் ஆர்டர் பெற்று, கூலிக்கு நகை வடிவமைப்பு செய்து கொடுக்கின்றனர்.
கடந்த, 22ம் தேதி பட்டறை உரிமையாளர் ராஜேந்திரன், ஊழியர் சாந்தகுமார் ஆகியோர் நகைகளை எடுத்துச் சென்றபோது, காரில் வந்த கும்பல் தடுத்து, வீச்சரிவாள், இரும்பு கம்பியால் தாக்கி, நகைகளை பறித்துச் சென்றுள்ளனர். போலீசார் நான்கு பேரை கைது செய்திருக்கின்றனர். தங்க நகைகளை இன்னும் மீட்டுத் தரவில்லை.
தங்க நகை பட்டறை உரிமையாளர்கள், தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும். காவல்துறை வேகமாக இயங்கி, நகையை மீட்டெடுக்க வேண்டும். காவல்துறையினர் கைகள் கட்டப்பட்டுள்ளன. சுயமாக செயல்பட வேண்டும்.
பூட்டிய வீடுகளில் திருடுவது; முதியோர் வசிக்கும் வீடுகளுக்குள் நுழைவது; நகை பறிப்பு சம்பவங்கள் இனியும் தொடரக்கூடாது.
இவ்வாறு, அவர் கூறினார்.