/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'லாபகரமான விவசாயத்துக்கு துல்லிய வேளாண்மை'
/
'லாபகரமான விவசாயத்துக்கு துல்லிய வேளாண்மை'
ADDED : பிப் 26, 2025 04:11 AM

கோவை; கோவை, தமிழ்நாடு வேளாண் பல்கலை, மண் மற்றும் நீர்வளப் பாதுகாப்பு பொறியியல் துறை சார்பில், 'துல்லிய வேளாண் தொழில்நுட்பம்' குறித்து, விவசாயிகளுக்கு ஏழு நாள் பயிற்சி முகாம் நேற்று துவங்கியது.
வேளாண் பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவன டீன் ரவிராஜ், முகாமைத் துவக்கி வைத்தார்.
முகாமில் மண் மற்றும் நீர்வள பாதுகாப்புத் துறை தலைவர் பாலாஜி கண்ணன், பயிற்சியின் நோக்கம் குறித்து பேசுகையில், “நீர் உட்பட அனைத்து இடுபொருட்களையும் மிகத் துல்லியமான அளவில், விரயம் செய்யாமல், உரிய காலத்தில் கொடுத்து, அதிக மகசூல் பெறுவதுதான் துல்லிய வேளாண்மை. துல்லிய வேளாண்மையால் பருவமற்ற காலத்திலும், விவசாயத்தை லாபகரமாக மேற்கொள்ள முடியும்,” என்றார்.
மத்திய வேளாண் மற்றும் தோட்டக்கலையில் துல்லிய வேளாண்மைக்கான தேசியக் குழுவின் (என்.சி.பி.ஏ.ஹெச்.,) இணை திட்ட இயக்குநர் கிருஷ்ணகுமார் கவுசல், காணொலிக் காட்சி வாயிலாக பேசுகையில், நாற்றங்கால் முதல் அறுவடைக்குப் பிந்தைய தொழில்நுட்பம் வரை, எந்த அளவுக்கு, எந்த நேரத்தில் நீர் கொடுக்க வேண்டும் என, துல்லியமாக அறிந்து கொடுக்க வேண்டும்.
நிலத்தடி நீரை விட, மழை நீர் சிறப்பானது. அதை எப்படி சேகரித்துப் பயன்படுத்தலாம் என யோசிக்க வேண்டும். தொழில்நுட்பங்களை முறையாகப் பயன்படுத்தினால், தேவையற்ற விரயங்களைக் குறைத்து, லாபகரமான விவசாயத்தை மேற்கொள்ளலாம், என்றார்.
பயிற்சியில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 30 விவசாயிகள் பங்கேற்றுள்ளனர். பயிற்சி துவக்க விழாவில், உதவிப் பேராசிரியர் அருணாதேவி, உதவி ஆசிரியர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

