ADDED : ஜூலை 13, 2026 08:02 PM
மேட்டுப்பாளையம்: ஆலாங்கொம்பில் இருந்து, குத்தாரிபாளையம் சாலை வழியாக கிராம மக்கள், மாணவர்கள் சென்று வருகின்றனர். இங்கு, புதிய தார் சாலை அமைக்க, 47.25 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. இதையடுத்து குத்தாரிபாளையத்தில் இருந்து, ஆலாங்கொம்பு பழையூர் எல்லை வரை, மெட்டல் சாலை போடப்பட்டது. அதற்கு பிறகு சாலை அமைக்கவில்லை.
இது குறித்து ஜடையம்பாளையம் ஊராட்சி முன்னாள் தலைவர் பழனிசாமி மற்றும் பொதுமக்கள், மாவட்ட கலெக்டருக்கு விடுத்துள்ள கோரிக்கை மனுவில் கூறியுள்ளதாவது:
பொதுமக்கள் இந்த சாலையை, 60 ஆண்டுகளுக்கும் மேலாக பயன்படுத்தி வருகின்றனர். இங்கு புதிதாக தார் சாலை அமைக்கும் போது, தனி நபர் ஒருவர் எதிர்ப்பு தெரிவிப்பதால், ஆக்கிரமிப்பு செய்த இடத்தில் சாலை போட முடியாத நிலை ஏற்படுகிறது.
பலமுறை இந்த இடத்தை சர்வே செய்யும்படி ஜமாபந்தியில், கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது. ஆனால் நடவடிக்கை இல்லை. அதனால் இவ்வழியாக வாகனங்களில் செல்பவர்கள் மிகவும் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர்.
எனவே, மூன்று கிராம மக்கள் பயன்பெறும் இந்த சாலை இடத்தை வருவாய் துறை சர்வே செய்து, தார் சாலை அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியுள்ளனர்.
