/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வேளாண் பல்கலையில் நிகழ்நேர பி.சி.ஆர்., பயிற்சி
/
வேளாண் பல்கலையில் நிகழ்நேர பி.சி.ஆர்., பயிற்சி
ADDED : செப் 01, 2024 10:52 PM
கோவை:கோவை வேளாண் பல்கலையில் 'ரியல்டைம் பி.சி.ஆர்.,' எனப்படும், ஆர்.டி.பி.சி.ஆர்., குறித்த ஒரு நாள் பயிற்சிக் கருத்தரங்கு நடந்தது.
நிகழ்நேர பி.சி.ஆர்., என்பது மூலக்கூறு உயிரியல் தொழில்நுட்பத்தின் அடிப்படையில், குறிப்பிட்ட டி.என்.ஏ., மூலக்கூறின் பெருக்கத்தை, நியூக்ளிக் அமிலங்களைக் கண்டறிய உதவும், ஒரு சோதனை வழிமுறையாகும்.
இது மருத்துவம், வேளாண் தொழில்நுட்பம் உட்பட பல்வேறு துறை ஆய்வுகளில் வெகுவாக பயன்படுத்தப்படுகிறது. கோவிட் பெருந்தொற்றுக் காலத்தில், இந்த சோதனையின் பயன்பாடு பேருதவியாக இருந்தது.
வேளாண் பல்கலையில், தாவர மூலக்கூறு உயிரியல் துறை மற்றும் 'பயோராட்' தனியார் நிறுவனம் சார்பில், ஆர்.டி-பி.சி.ஆர்., குறித்த ஒரு நாள் பயிற்சிக் கருத்தரங்கு நடந்தது.
இதில், திட்ட இயக்குனர் மோகன்குமார் பேசுகையில், “ஆர்.டி.பி.சி.ஆர்., தாவர நோய்க்கிருமி கண்டறிதல், மரபணு வெளிப்பாடு பகுப்பாய்வு மற்றும் மரபணு மாற்ற ஆய்வுகள் உள்ளிட்ட வேளாண் ஆய்வுகளில், வெகுவாக பயன்படுத்தப்படுகிறது,” என்றார்.
தாவர மூலக்கூறு உயிரியல் மற்றும் உயிரி தொழில்நுட்ப மைய இயக்குனர் செந்தில், ''இத்தகைய தொழில்நுட்பங்கள், மாணவர்களின் ஆய்வுத் திறனை மேம்படுத்துகிறது. குறிப்பாக, தாவர உயிரித் தொழில்நுட்பம் மற்றும் நோயறிதல் துறைகளில், இதன் தேவை இன்றியமையாததாக உள்ளது,” என்றார்.
வேளாண் பல்கலையின் பல்வேறு துறைகளைச் சேர்ந்த 57 முதுகலை மாணவர்கள், துறை பேராசிரியர்கள் பங்கேற்றனர்.