/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'திருமந்திரம் படித்தால் குளிர்கிறதே என் உள்ளம் '
/
'திருமந்திரம் படித்தால் குளிர்கிறதே என் உள்ளம் '
ADDED : செப் 08, 2024 10:54 PM
கோவை:பேராசிரியர் கோவை கணேசன் எழுதிய, 'முக்கனிச் சோலை' என்ற நுால், கோவை வசந்தவாசல் கவிமன்றம் சார்பில் வெளியிடப்பட்டது.
நுாலை, தொண்டாமுத்துார் அரசு கலை அறிவியல் கல்லுாரி தமிழ்த்துறை உதவி பேராசிரியர் ஆனந்தி வெளியிட, பி.எஸ்.ஜி., சர்வஜன மேல் நிலைப்பள்ளி தமிழாசிரியர் குமாரசாமி பெற்றுக்கொண்டார்.
நுால் குறித்து, தமிழாசிரியர் குமாரசாமி பேசியதாவது:
திருமூலரின் திருமந்திரம், அவ்வையாரின் மூதுரை, பூதஞ்சேந்தனாரில் இனியவை நாற்பது உள்ளிட்ட பழம்பெரும் இலக்கியங்களில் இருந்து, முக்கியமான பாடல்களை தொகுத்து, அதற்கு கவித்துவமான நடையில் விளக்க உரையை, கவிதையாகவே தந்திருக்கிறார் நுாலாசிரியர் கணேசன்.
உரைநடையாக இல்லாமல், யாப்பு இலக்கணம் மாறாமல், மூலப்பாடல்களுக்கு இணையாக வெண்பா மற்றும் விருத்தப்பாக்களில், விளக்க உரையை எழுதி இருப்பது நல்ல முயற்சி.
இந்த நுாலில் உள்ள திருமூலரின் திருமந்திர பாடல்களை படிக்கும், உடல் சிலிர்க்கிறது, உள்ளம் குளிர்கிறது. பறப்பது பறவைக்கும், நீந்துவது மீன்களுக்கும் சலிக்காது. அது போல படைப்பாளர்கள் சலிக்காமல் தொடர்ந்து எழுத வேண்டும்.
இவ்வாறு, அவர் பேசினார்.
கவிஞர்கள், முகில் தினகரன், சுந்தரராமன், நா.கி.பிரசாத், சண்முகம், அன்பு, தன்மானம் உள்ளிட்டோர் கருத்துரை வழங்கினர்.