ADDED : ஜூலை 13, 2026 08:21 PM
மேட்டுப்பாளையம்: காரமடை ஊராட்சி ஒன்றியத்தில், ஒரு சில கிராமங்களில் மட்டும், விவசாயிகள் சிகப்பு தண்டுக் கீரையை பயிர் செய்து வருகின்றனர். இந்த கீரையை தமிழக மக்கள் விரும்பி வாங்குவதில்லை. ஆனால் கேரளா மக்கள் இந்த கீரையை விரும்பி வாங்குகின்றனர். காரமடை சுற்றுப்பகுதியில் விளையும் சிகப்பு தண்டுக்கீரை முழுவதும், கேரளாவுக்கு அனுப்பி வருகின்றனர்.
இது குறித்து பெள்ளாதி ஊராட்சி மொங்கம்பாளையத்தை சேர்ந்த விவசாயிகள் கூறியதாவது:
ஒரு ஏக்கருக்கு அதிக பட்சம், 13 ஆயிரம் கீரை கட்டுகள் கிடைக்கும். ஒரு கட்டு கீரை, கடந்த வாரம் எட்டு ரூபாய்க்கு வியாபாரிகள் வாங்கிச் சென்றனர். கேரளாவில் இந்த கீரையின் தேவை அதிகரித்ததால், விலை உயர்ந்து, ஒரு கட்டு, 12 ரூபாய்க்கு வியாபாரிகள் வாங்கிச் செல்கின்றனர். இது விவசாயிகளுக்கு நல்ல லாபத்தை அளிக்கிறது. சில நேரங்களில் ஒரு கட்டு கீரை, நான்கு, ஐந்து ரூபாய்க்கு வியாபாரிகள் வாங்கிச் செல்கின்றனர். அப்போது விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படும். இருந்த போதும் விதைத்த, 25வது நாளில் ஒரு வருவாய் கிடைப்பதால், இதை விவசாயம் செய்து வருகிறோம். இவ்வாறு விவசாயிகள் கூறினர்.
