ADDED : ஜூலை 22, 2024 03:00 AM
ஒன்றிய ஆபீஸ் பிரச்னைக்கு தீர்வில்ல ை !
உடுமலை ஒன்றிய அலுவலகத்தில் அதிகாரி ஒருத்தரை சந்தித்தேன். 'எங்க ஆபீஸ்ல இட நெருக்கடி இருந்துட்டே இருக்குங்க' என, பேச ஆரம்பித்தார்.
ஒன்றியத்துக்கு புது கட்டடம் கட்டுவதற்கு உள்ளாட்சி துறைக்கு கருத்துரு அனுப்பியிருக்கோம். அதுவரைக்கும், இடநெருக்கடியை சமாளிக்க, நகராட்சி பழைய கட்டடத்தில் மாற்று இடம் கேட்டோம்.
ஆனா, புது ஒன்றிய அலுவலக கட்டடம் கட்டுவதற்கு அனுமதி கொடுத்தா மட்டுமே, நகராட்சி வளாகத்துக்கு மாற்றுவதற்கு அனுமதி வழங்க முடியம்னு, நகராட்சி நிர்வாகம் சொல்லி விட்டது.
ஊராக வளர்ச்சி துறைக்கு கருத்துரு அனுப்பி, ஓராண்டுக்கு மேலாகியும் எந்த பதிலும் இல்லை. ஒன்றிய அலுவலகத்துக்கு நிறைய மக்கள் வர்றதால, நெருக்கடியாவே இருக்கு.
மக்கள் பிரச்னைக்கு தீர்வு காண ஒன்றிய அலுவலகத்துக்கு வர்றாங்க. ஆனா, ஒன்றிய அலுவலக இடநெருக்கடி பிரச்னைக்கே தீர்வு கிடைக்காம அலைமோதுறோம்னு, விபரத்தை சொன்னார்.
சொன்னபடி நிதி கொடுங்க்கலைங்க!
பொள்ளாச்சி கல்வி மாவட்டத்துக்கு வந்த, பள்ளி தலைமையாசிரியர்கள், பள்ளி நிர்வாக செலவுக்கு எங்க சம்பளத்தை செலவு பண்ணுறோம்னு, பேசிக்கிட்டு இருந்தாங்க. என்ன விஷயம்னு விசாரித்தேன்.
கல்வி மாவட்டத்தில், அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில், '100 எம்பிபிஎஸ்' வேகம் கொண்ட பி.எஸ்.என்.எல்., பிராட்பேண்ட் இணைப்பு, 1,500 ரூபாய் கட்டணத்திற்குள் சேவை பெறும் வகையில் இணைப்பு கொடுத்திருக்காங்க.
அதுக்காக, சி.இ.ஓ., ஆபீஸ் வாயிலாக, பள்ளி மேலாண்மை குழு வங்கிக்கணக்குக்கு பணம் கொடுப்பதாக சொன்னாங்க.
ஒவ்வொரு பள்ளிக்கும், 1,300 ரூபாய் வரை பில் பெறப்பட்டது. ஆரம்பத்தில் ஓரிரு மாதங்கள், அந்த தொகை விடுவிக்கப்பட்டது. இப்போது, 1,600 ரூபாய் வரை பில் வருது. ஆனா, அதற்கான தொகை விடுவிக்கப்படுவது கிடையாது.
ஏதேனும் ஒரு நிதி அல்லது சொந்த செலவில் பிராட்பேண்ட் இணைப்புக்கான கட்டணத் தொகையை செலுத்துகிறோம்னு, சொன்னாங்க.
பாதுகாப்பு இல்லாத பயணம்
கிணத்துக்கடவு பஸ் ஸ்டாப்பில் இருந்து, பள்ளிக்கு குழந்தைகளை ஆட்டோவில் அனுப்பி விட்டு, குழந்தைகள் பாதுகாப்புல பெற்றோருக்கு அக்கறையே இல்லைனு, இரு பெற்றோர் பேசிக்கிட்டு இருந்தாங்க. என்ன சொல்றீங்க... என, விசாரித்தேன்.
கிணத்துக்கடவுல இருக்கற, தனியார் ஸ்கூல்களுக்கு குழந்தைகளை அழைச்சுட்டு போகறதுக்கு, ஆட்டோக்கள் ஓட்டுறாங்க. ஆனா, சிலர் சொந்த உபயோக கார்களில், 'டி போர்டு' போன்று, குழந்தைகளை அழைச்சுட்டு போறாங்க.
மோட்டார் வாகன போக்குவரத்து சட்டத்தை மீறி, சொந்த கார்களை, வாடகைக்கு ஓட்டுறாங்க. ரோட்டுல ஏதாவது அசம்பாவிதம் நடந்தா இதற்கு யார் பொறுப்பு ஏற்பது. இதுல பெற்றோர்கள் மீதும் தப்பு இருக்கு.
குழந்தைங்க குறைந்த செலவுல ஸ்கூலுக்கு அனுப்பினா போதும்னு நினைக்குறாங்க. ஆனா, பாதுகாப்பா போகணும்னு நினைக்கல. இத, ஆர்.டி.ஓ., ஆபீசர்கள் கவனிச்சு நடவடிக்கை எடுக்கணும்னு, சொன்னாங்க.
'ஓசி'யில கேட்டா 'ஏசி' கிடைக்குமா?
உடுமலையில, ஆளுங்கட்சிக்கு இப்படி ஒரு நிலை வரக்கூடாதுங்க, என, ஆதங்கத்துடன் பேசத் துவங்கினார் ஆளுங்கட்சி நண்பர் ஒருவர். என்ன மேட்டர், புரியும் படி சொல்லுங்கனு விசாரித்தேன்.
உடுமலையில அமைச்சர் சாமிநாதன் பங்கேற்ற அரசு விழா, தனியார் மண்டபத்தில் நடந்துச்சுங்க. மண்டபத்துக்கு கட்டணம் செலுத்தாததால, விழா நடந்து கொண்டிருக்கும் போதே, திடீரென மின்தடை செய்யப்பட்டு, 'ஏசி'யையும் நிறுத்திட்டாங்க.
அமைச்சரும் மண்டபத்துக்கு வெளியில வந்து, வளாகத்தில் நின்று, 800க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினாரு.
ஆளும்கட்சியினர், மண்டப உரிமையாளரிடம் பேச்சு நடத்தி, ஒரு லட்சம் ரூபா வழங்குவதா சொல்லியிருக்காங்க. அதுக்கப்பறம், மீண்டும் மின் சப்ளை வழங்கி, 'ஏசி'ய ஓட விட்டிருக்காங்க.
மண்டபத்துக்கு உள்ளே சென்ற அமைச்சர், அனைத்து துறை அதிகாரிகள் பங்கேற்ற வளர்ச்சித்திட்ட பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டத்தை நடத்தினாரு. அரசு விழாவிற்கு, 'ஓசி' யில் மண்டபம் கேட்டால் 'ஏசி'யும் கிடைக்குமா, என, கொட்டித்தீர்த்தார்.
அறங்காவலர் அலப்பறை தாங்க முடியல
ஆனைமலையில் நண்பர் ஒருவரை சந்தித்தேன். 'மாசாணியம்மன் கோவில்ல அறங்காவலர் ஒருத்தரு, அதிகாரிககிட்ட காரசாரமா பேசிக்கிட்டு இருந்தாரு,' என, பேச ஆரம்பித்தார்.
ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில், அறங்காவலர் குழுல இருக்குற ஒருத்தரு, எல்லாத்துலயும் தன்னோட பேரு கண்டிப்பாக வரணும்னு ஆர்டர் போடுகிறார். சமீபத்துல கூட கோவில் பாலாலயம் நடந்த போது, அவருக்கு பொட்டு வையுங்க, இவருக்கு வையுங்க, என குரலை உயர்த்தி பேசி, எல்லோரையும் அதட்டுறாரு.
அதிகாரிக வாயிலாக, பத்திரிகைகளுக்கு செய்தி கொடுக்கும் போது, யாரு பேரு வருதோ இல்லையோ,என் பேரு இல்லாம செய்தியே போடக்கூடாது; பேரு போடலைனா அந்த பத்திரிகைகாரங்கள கோவிலுக்குள்ள விடாதீங்கனு, கடுமையா பேசறாராம்.
ஆளுங்கட்சியில இருக்குறதலா, இவரு அலப்பறைய பலரும் பொறுத்து போறாங்களாம். தமிழக முதல்வருக்கு இவரு பண்ணுற அலப்பறை எல்லாம் தெரிஞ்சா, என்ன ஆகும்னு தெரியல என, ஆளுங்கட்சி விசுவாசிகளும் புலம்பறாங்க, என, நண்பர் சொல்லி முடித்ததும், முருகரை தரிசிக்க புறப்பட்டார்.