/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோவை ரயில்வே ஸ்டேஷனின் தேவைகள்: மத்திய அமைச்சரிடம் 'லகு உத்யோக் பாரதி' பட்டியல்
/
கோவை ரயில்வே ஸ்டேஷனின் தேவைகள்: மத்திய அமைச்சரிடம் 'லகு உத்யோக் பாரதி' பட்டியல்
கோவை ரயில்வே ஸ்டேஷனின் தேவைகள்: மத்திய அமைச்சரிடம் 'லகு உத்யோக் பாரதி' பட்டியல்
கோவை ரயில்வே ஸ்டேஷனின் தேவைகள்: மத்திய அமைச்சரிடம் 'லகு உத்யோக் பாரதி' பட்டியல்
ADDED : செப் 05, 2024 12:23 AM

கோவை : மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவை, லகு உத்யோக் பாரதி அமைப்பினர் நேரில் சந்தித்து, கோவை ரயில்வே ஸ்டேஷனை மேம்படுத்த இன்னும் என்னென்ன வசதிகள் செய்து தர வேண்டுமென்கிற பட்டியலை வழங்கியுள்ளனர்.
தமிழகத்தில் சென்னைக்கு அடுத்தபடியாக, இரண்டாவது பெரிய நகரமாக கோவை உருவெடுத்து வருகிறது; நகர்ப்பகுதி மட்டுமின்றி சுற்றுவட்டார பகுதிகள் அதிவேகமாக வளர்ச்சி அடைந்து வருகின்றன.
அதற்கேற்ப, போக்குவரத்து வசதிகளை மேம்படுத்த வேண்டியிருக்கிறது. வெளிநாடுகளுக்கு நேரடி விமான சேவை அளிக்கும் வகையில், விமான நிலையத்தை விரிவாக்கம் செய்வதற்கான பணிகள் வேகப்படுத்தப்பட்டுள்ளன.
இதேபோல், வெளியூருக்கும், வெளிமாநிலங்களுக்கும் அதிகமான பயணிகள் ரயில்களை பயன்படுத்துவதால், ரயில் போக்குவரத்தையும் மேம்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறது. ஏனெனில், தெற்கு ரயில்வேயில் அதிக வருவாய் ஈட்டக்கூடிய மூன்றாவது ஸ்டேஷனாக கோவை உள்ளது.
ரூ.650 கோடி வருவாய்
2023-24 நிதியாண்டில் மட்டும், பயணிகள் வருவாய் ரூ.350 கோடி, சரக்கு போக்குவரத்து வாயிலாக ரூ.300 கோடி என, ரூ.650 கோடி வர்த்தகம் நடந்திருக்கிறது. இது, சேலம் கோட்டத்தின் மொத்த வருவாயில், 45 சதவீதம்; தெற்கு ரயில்வேயில் 7 சதவீத பங்களிப்பாகும். கோவை ரயில்வே ஸ்டேஷனை, 1.1 கோடி பயணிகள் பயன்படுத்தியுள்ளனர்.அதனால், ரயில்வே ஸ்டேஷனை மேம்படுத்த, தனியார் ஆலோசனை நிறுவனம் மூலமாக, 700 கோடி ரூபாய்க்கு உத்தேச திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
இச்சூழலில், லகு உத்யோக் பாரதி அமைப்பின் தேசிய செயலர் ஓம் பிரகாஷ் குப்தா, செயற்குழு உறுப்பினர் விஜயராகவன், தமிழக பொது செயலாளர் வீர்செழியன் ஆகியோர், டில்லியில் மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவை நேரில் சந்தித்து, கோவை ரயில்வே ஸ்டேஷனை மேம்படுத்த வேண்டிய அவசியம் குறித்து பேசினர்.
அப்போது, என்னென்ன வசதிகள் செய்து தர வேண்டும்; அவ்வாறு மேம்படுத்தும் பட்சத்தில், ரயில்வே துறைக்கு எவ்வளவு வருவாய் கிடைக்கும் என்பதை குறிப்பிட்டு, கோரிக்கை மனு அளித்துள்ளனர்.