/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நீர்வழித்தடங்கள் ஆக்கிரமிப்பால் ஆபத்து மழைநீர் வெளியேறுவதில் சிக்கல்
/
நீர்வழித்தடங்கள் ஆக்கிரமிப்பால் ஆபத்து மழைநீர் வெளியேறுவதில் சிக்கல்
நீர்வழித்தடங்கள் ஆக்கிரமிப்பால் ஆபத்து மழைநீர் வெளியேறுவதில் சிக்கல்
நீர்வழித்தடங்கள் ஆக்கிரமிப்பால் ஆபத்து மழைநீர் வெளியேறுவதில் சிக்கல்
ADDED : மே 23, 2024 02:18 AM

பொள்ளாச்சி: பொள்ளாச்சி நகர் மற்றும் சுற்றுப்பகுதி கிராமங்களில் அவ்வப்போது கனமழை பெய்கிறது. உடுமலை, வால்பாறை செல்லும் முக்கிய நெடுஞ்சாலைகளில் மழைநீர் அதிகமாக தேங்குவதால் வாகன ஓட்டுநர்கள் சிரமப்படுகின்றனர்.
குறிப்பாக, ஊஞ்சவேலாம்பட்டி அருகே தேசிய நெடுஞ்சாலையில் மழை பெய்தால், பல மணி நேரம் தண்ணீர் தேங்கும் நிலையில், சாலையோரம் மழைநீர் வடிகால் வசதி செய்யவில்லை. பல ஆண்டுகளாக இப்பிரச்னை தொடர்ந்தாலும் தேசிய நெடுஞ்சாலை துறையோ, ஊராட்சி நிர்வாகவோ இதற்கு நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுப்பதில்லை.
அதிக தண்ணீர் தேங்கும்போது, வாகனங்களை இயக்க முடியாமல் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது. குறிப்பாக, பைக்கில் செல்வோர், பரிதவிக்கின்றனர். இந்நிலையில், நேற்றுமுன்தினம் பெய்த கனமழையால், மழைநீர் தேங்கி போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதேபோல, கெங்கம்பாளையம் தரைப்பாலத்தில் தேங்கிய தண்ணீரால் அப்பகுதி மக்கள் பாதிக்கப்பட்டனர். கோலார்பட்டி ரயில்வே தரைப்பாலத்தில் வாகனங்கள் செல்ல முடியாத அளவிற்கு தண்ணீர் தேங்கியது.
இதையடுத்து, ஊராட்சி நிர்வாகத்தினர் துரிதமாக செயல்பட்டு, தண்ணீரை வெளியேற்றம் செய்தனர். இது ஒருபுறமிருக்க, வடக்கிபாளையம் வாட்டர்டேங்க் வீதியில் மழையின் காரணமாக தனபால் என்பவரின் வீட்டுச் சுவர் சேதமடைந்தது.
தன்னார்வலர்கள் கூறியதாவது:
ஊஞ்சவேலாம்பட்டி, திப்பம்பட்டி, சூளேஸ்வரன்பட்டி ஆகிய பகுதிகளில் மழையின் தாக்கம் அதிகரித்தால், சாலையில் தண்ணீர் தேக்கம் அடைகிறது. மழைநீர் வடிகால் அமைப்பு முறையாக கிடையாது.
மேலும், நகர் மற்றும் சுற்றுப்பகுதி கிராமங்களில், ரோட்டை ஒட்டிய நீர்வழித்தடங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு, கட்டடங்கள் எழுப்பப்பட்டுள்ளது. இதனால், தண்ணீர் வழிந்தோடாமல் தேக்கம் அடைகிறது.
தேங்கியிருக்கும் நீரில் கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரம் பாதிக்கிறது. நீர்வழித்தடங்கள் ஆக்கிரமிப்பு தொடர்ந்தால், இனி வரும் நாட்களில் பல கிராமங்களில் உள்ள வீடுகள், தண்ணீரில் மூழ்கும் அபாய நிலையும் ஏற்படலாம்.
நகர் மற்றும் சுற்றுப்பகுதி கிராமங்களில் நீர்வழித்தடங்கள் ஆக்கிரமிப்பைக் கண்டறிந்து அகற்ற உள்ளாட்சி அமைப்பினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.

