
மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் அருகே கல்லாறில் சச்சிதானந்த ஜோதி நிகேதன் பன்னாட்டு பள்ளியில், ஆண்டு விளையாட்டு விழா நடந்தது. விழாவுக்கு பள்ளி அறங்காவலர் வருண் கார்த்திகேயன் தலைமை வகித்தார்.
செயலர் கவிதாசன் முன்னிலை வகித்தார். பள்ளி முதல்வர் உமா மகேஸ்வரி வரவேற்றார். நீலகிரி மாவட்ட எஸ்.பி., சுந்தரவடிவேல், மாணவ, மாணவியரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டு, விளையாட்டு போட்டிகளை துவக்கி வைத்தார்.
இதில் அக்னி, பிருத்வி, ஆகாஷ், திரிசூல் ஆகிய நான்கு அணிகளாக, மாணவ, மாணவிகள் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்றனர். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
விழாவில் மேட்டுப்பாளையம் வனக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய முதல்வர் பாலசுப்ரமணியம், முன்னாள் மாணவி டாக்டர் சவுனிவாஷினி, பிரபு கனகராஜ் ஆகியோர் பேசினர்.
விளையாட்டுப் போட்டிகளில் அதிக வெற்றி புள்ளிகளை எடுத்த, ஆகாஷ் அணி ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை பெற்றது. விழாவில் மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.
பள்ளி துணை முதல்வர் சக்திவேலு நன்றி கூறினார். உடற்கல்வி துணை இயக்குனர் அனிதா விழா ஏற்பாடுகளை செய்திருந்தார். ஆசிரியர்கள் மாணவ, மாணவியர், பெற்றோர் ஆகியோர் விழாவில் பங்கேற்றனர்.