/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பள்ளிகளில் சிறந்த உட்கட்டமைப்பு வேண்டும்
/
பள்ளிகளில் சிறந்த உட்கட்டமைப்பு வேண்டும்
ADDED : செப் 05, 2024 12:28 AM

எதிர்கால தலைவர்களை உருவாக்குபவர்கள் ஆசிரியர்கள். அவர்கள் மனதளவில் திருப்தியுடன் இருந்தால் மட்டுமே, படைப்பு சிறப்பானதாக மாறும். கற்பிப் பதில் மனதளவில் திருப்தியாக இருக்கிறார்களா? என்ன எதிர்பார்க்கின்றனர் நம் ஆசிரியர்கள்?
'முழு ஓய்வூதிய திட்டம் வேண்டும்'
ஆனந்தகுமார், தலைவர் அனைத்து ஆசிரியர் சங்கம் கோயம்புத்துார்: ஆசிரியர் பற்றாக்குறைக்கு, அரசு தீர்வு காண வேண்டும். வழக்கின் காரணமாக, பதவி உயர்வுகள் தராமல், காலம் தாழ்த்தப்பட்டு வருகிறது. இதற்கு தீர்வு கண்டு, பதவி உயர்வு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். முழு ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.
விளையாட்டு ஆசிரியர்கள் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். கோவை மாநகராட்சி பள்ளிகளில், கடந்த ஏழு ஆண்டுகளாக நடுநிலைப்பள்ளிகளில், விளையாட்டு ஆசிரியர் இல்லாத பிரச்னை இருந்து வந்தது.
எங்களது வேண்டுகோளை ஏற்று, தற்போதைய மாநகராட்சி கமிஷனர் சிவகுருபிரபாகரன், நடுநிலைப்பள்ளிகளுக்கு சமீபத்தில், 45 உடற்கல்வி ஆசிரியர்களை நியமித்துள்ளது, மிகச்சிறப்பான விஷயம்.
வகுப்புகளில் மாணவர்களை, முழுமையாக கண்காணிக்க வேண்டி உள்ளதால் அரசாணையை மாற்றி, 1:30 என்ற விகிதாச்சாரம் அடிப்படையில் மாணவர்களும், ஆசிரியர்களும், அதற்கேற்ப வகுப்பறைகளும் இருந்தால், இன்னும் கல்வித்தரம் சிறப்பாக இருக்கும்.
'நண்பராக நினைத்தால் போதும்!'
தமிழ்நாடு உயர்நிலை பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக மாநில துணைத்தலைவர் அருளானந்தம்: கல்வியறிவு குறைவாக இருந்த காலகட்டத்தில், மாணவர்களை வழிநடத்திய ஆசிரியர்களை தெய்வங்களாகவும், வழிகாட்டியாகவும் பார்த்தனர்; கொண்டாடினர்; இன்றும் கொண்டாடுகின்றனர். காரணம், படித்த ஒரு சிலர் மட்டுமே ஆசிரியர் பணியில் இருந்தனர்.
இன்று படிப்பறிவு அதிகரித்துள்ளது. புத்தகம் மட்டுமின்றி ஆசிரியர்களுக்கும் தெரியாதவற்றையும், சுற்றியிருக்கும் நிலவரங்களையும், மாணவர்கள் அறிந்து வருகின்றனர். எனவே, தெய்வமாகவும், வழிகாட்டியாகவும் ஆசிரியர்களை, மாணவர்கள் நினைக்க வேண்டியதில்லை.
மாறாக, நல்ல நண்பனாக, நம் நலன் காக்கும் மனிதராக ஆசிரியர்களை, நினைத்தால் போதும். நல்லதொரு மாணவர் சமுதாயம் உருவாக, முழு அளவு ஆசிரியர்கள் பாடுபட வேண்டும். தன்னிடம் படித்தவர் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., என நல்ல நிலைக்கு வரும்போது, பொறாமைப்படாத ஒரே இனம் ஆசிரியர்தான்.
இப்படிப்பட்ட ஆசிரியர்கள், மாணவர்கள் முன்னேற்றத்துக்காக கடமை உணர்வோடு பணிபுரிய வேண்டும். இன்று 'டிஜிட்டல்' யுகத்தில் வாழ்ந்து வருகிறோம். எனவே, மாணவர்களுக்கு புத்தகம், தாள்களுக்கு பதிலாக, 'டேப்' வழங்கினால் அவர்கள் கல்வி பயில சுலபமாக இருக்கும்; கல்வித்தரமும் உயரும்.
'மாணவர்களிடம் ஒழுக்கம் குறைகிறது'
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு மாவட்ட செயலாளர் அரசு: தமிழ்நாட்டில் மட்டுமின்றி, மற்ற நாடுகளிலும் ஆசிரியர்கள் மட்டுமே ஏணிப்படிகளாக இருந்து மாணவர்களை வழி நடத்துகிறார்கள்.
மற்றபடி ஆசிரியர் இல்லை என்றால் மாணவர்கள் மட்டுமல்ல, சமுதாயமே இல்லை என்றாகிவிடும். ஆசிரியர்கள் தன் பணியை தொண்டு என்று நினைக்காமல், தனது உயிராக நினைத்து அந்த பணியை ஆற்றுகின்றனர்.
ஆனால், மாணவர்களிடையே ஒழுக்கம் குறைந்து கொண்டே செல்கிறது. இதற்கு யாரை குறை கூறுவது என்று தெரியவில்லை.
தமிழக அரசின் கல்வித்துறை நடைமுறையா, பெற்றோர்களா அல்லது சமுதாயமா என்பதை சரியாக புரிந்து கொள்ள முடியாமல், தேவையற்ற பிரச்னைகளை ஆசிரியர்கள் எதிர்கொள்ள வேண்டி உள்ளது.
ஒரு மாணவன் ஒழுக்கத்துடன் இருந்தால், அவனுடைய கல்வி சிறப்பாக அமையும். அவனுடைய எதிர்காலமும் சிறப்பாக அமையும்.
இதில் கல்வித்துறையும், ஆசிரியர்களும், சமுதாயமும் பங்களிப்பை அளிக்க வேண்டும். பள்ளிகளில் சிறந்த கற்பிக்கும் சூழலை, உள்கட்டமைப்பை அரசு ஏற்படுத்த வேண்டும்.