/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பாமாயில், துவரம் பருப்பு தட்டுப்பாடு ரேஷன் கடைகளில் நீடிக்கிறது
/
பாமாயில், துவரம் பருப்பு தட்டுப்பாடு ரேஷன் கடைகளில் நீடிக்கிறது
பாமாயில், துவரம் பருப்பு தட்டுப்பாடு ரேஷன் கடைகளில் நீடிக்கிறது
பாமாயில், துவரம் பருப்பு தட்டுப்பாடு ரேஷன் கடைகளில் நீடிக்கிறது
ADDED : ஜூன் 20, 2024 05:04 AM
உடுமலை, : திருப்பூர் மாவட்டத்துக்கு, இம்மாதத்துக்கான துவரம்பருப்பு, பாமாயில் இன்னும் வந்துசேரவில்லை. ரேஷன்கடைகளில், மே மாதத்துக்கான பருப்பு, பாமாயில் மட்டுமே வழங்கப்படுவதால், கார்டுதாரர்கள் ஏமாற்றம் அடைகின்றனர்.
தமிழக ரேஷன்கடைகளில், கிலோ 30 ரூபாய்க்கு துவரம்பருப்பு; 25 ரூபாய்க்கு வழங்கப்படும் பாமாயில் வாங்க, கார்டுதாரர்கள் மிகவும் ஆர்வம்காட்டுகின்றனர். தட்டுப்பாடு காரணமாக, கடந்த மாதம் பெரும்பாலான கார்டுதாரர்களுக்கு, துவரம் பருப்பு, பாமாயில் வழங்கப்படவில்லை.
மே மாதத்துக்கான ஒதுக்கீட்டு துவரம் பருப்பு, பாமாயிலை ஜூன் மாதத்துக்கான ஒதுக்கீட்டுடன் சேர்த்து, கார்டுதாரர்கள் பெற்றுக்கொள்ளலாம் என அரசு அறிவித்தது. திருப்பூர் மாவட்டத்தில், 1,136 ரேஷன்கடைகள் உள்ளன; எட்டு லட்சத்துக்கும் மேற்பட்ட கார்டுதாரர்கள் உள்ளனர்.
கடந்த மாதம் துவரம் பருப்பு, பாமாயில் கிடைக்காத கார்டுதாரர்கள், இம்மாதம் இரட்டிப்பாக கிடைக்கும் என எதிர்பார்த்திருந்தனர். ஆனால், திருப்பூர் மாவட்ட ரேஷன்கடைகளுக்கு, மே மாதத்துக்கான பொருட்கள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளன; இம்மாத ஒதுக்கீடு துவரம்பருப்பு, பாமாயில் இன்னும் வழங்கப்படவில்லை.
இதனால், அனைத்து ரேஷன்கடைகளிலும், மே மாதத்துக்கான துவரம்பருப்பு, பாமாயில் மட்டுமே தற்போது வினியோகிக்கப்பட்டு வருகிறது. இம்மாதத்துக்கான பருப்பு, பாமாயில் வழங்கப்படவில்லை.
இதனால், சில கார்டுதாரர்கள், 'இரண்டு மாதத்துக்கான பருப்பு, பாமாயில் சேர்த்து பெறலாம் என அரசே சொல்லிவிட்டது; ஆனாலும் ஏன் தர மறுக்கிறீர்கள்' என, கார்டுதாரர்கள் வாக்குவாதத்தில் ஈடுபடுவதாக, விற்பனையாளர்கள் புலம்புகின்றனர்.
மாவட்ட கூட்டுறவு துணைபதிவாளர் (குடிமைப்பொருள் வழங்கல்) பழனிசாமியிடம் கேட்டபோது, 'திருப்பூர் மாவட்டத்துக்கு, மே மாதத்துக்கான பாமாயில் நுாறு சதவீதம் வந்து சேர்ந்துவிட்டது; கடந்த மாதத்துக்கான துவரம்பருப்பு ஒதுக்கீடு முழுமையாக வந்துசேரவில்லை; இம்மாதத்துக்கான பருப்பு மற்றும் பாமாயில் இன்னும் வரவில்லை.
அதனால், மே மாதம் விடுபட்டோருக்கு முன்னுரிமை அளித்து, துவரம்பருப்பு, பாமாயில் வினியோகிக்க ரேஷன் விற்பனையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இம்மாத ஒதுக்கீடு விரைவில் வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது; மாவட்ட குடோன்களுக்கு வந்து சேர்ந்த உடன், கடைகளுக்கு அனுப்பப்பட்டு, கார்டுதாரர்களுக்கு துவரம்பருப்பு, பாமாயில் வினியோகிக்கப்படும்' என்றார்.