/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரோடுகளில் நிறுத்தப்படும் வாகனங்களுக்கு கட்டணம் மாநகராட்சியின் திட்டத்துக்கு வலுக்கும் எதிர்ப்பு
/
ரோடுகளில் நிறுத்தப்படும் வாகனங்களுக்கு கட்டணம் மாநகராட்சியின் திட்டத்துக்கு வலுக்கும் எதிர்ப்பு
ரோடுகளில் நிறுத்தப்படும் வாகனங்களுக்கு கட்டணம் மாநகராட்சியின் திட்டத்துக்கு வலுக்கும் எதிர்ப்பு
ரோடுகளில் நிறுத்தப்படும் வாகனங்களுக்கு கட்டணம் மாநகராட்சியின் திட்டத்துக்கு வலுக்கும் எதிர்ப்பு
ADDED : ஜூலை 08, 2024 11:09 PM

கோவை;குறிப்பிட்ட பகுதிகளில் நிறுத்தப்படும் வாகனங்களுக்கு, கட்டணம் வசூலிக்க திட்டமிட்டுள்ள மாநகராட்சியின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
கோவை மாநகராட்சி, 100 வார்டுகளில், 254 கி.மீ., பரப்பில் அமைந்துள்ளது. மாநகராட்சியில் வாகனப்பெருக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால், போக்குவரத்து நெரிசல் என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகி விடுகிறது.
குறிப்பாக வார இறுதி நாட்களில், ஒப்பணக்கார வீதி, கிராஸ்கட் ரோடு, ரேஸ்கோர்ஸ் உள்ளிட்ட முக்கிய ரோடுகளில் வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. குறிப்பாக, கிராஸ்கட் ரோட்டில் கடைகளில் பணிபுரிவோரின் வாகனங்கள், காலை முதல் இரவு வரை ரோட்டில் நிறுத்தப்படுகின்றன. பிற வாகனங்கள் செல்வதில் சிக்கல் ஏற்படுகிறது.
இந்நிலையில், மாநகரின் முக்கிய ரோடுகளில், நிறுத்தப்படும், பைக் மற்றும் கார்களுக்கு கட்டணம் வசூலிக்க, மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
ஒரு மணி நேரத்துக்கு பைக்குகளுக்கு ரூ.5 மற்றும் கார்களுக்கு, ரூ.20 என, கட்டணம் நிர்ணயிக்கப்பட உள்ளது. இதற்கு பல்வேறு அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
கோவை மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் கூறுகையில்,''மாநகராட்சியில், போக்குவரத்து நெரிசலை குறைக்கவும், தேவையின்றி ஒரே இடத்தில் அதிக நேரம் வாகனங்கள் நிறுத்துவதை தடுக்கவும், கட்டணம் வசூலிக்கும் நடைமுறை அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
வரும் கவுன்சில் கூட்டத்தில், இதுகுறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது. இதன்படி, ரேஸ்கோர்ஸ், கிராஸ்கட் ரோடு, பெரிய கடைவீதி, ராஜ வீதி, ரங்கே கவுடர் வீதி, வெரைட்டிஹால் ரோடு, கலை கல்லுாரி ரோடு, ரயில்வே ஸ்டேஷன் ரோடு, என்.எஸ்.ஆர்.ரோடு, பாரதி பார்க் ரோடு, உக்கடம் உள்ளிட்ட பகுதிகளில், இக்கட்டண நடைமுறையை அமல்படுத்த திட்டமிட்டுள்ளோம்,'' என்றார்.
கோவை சிட்டிசன் வாய்ஸ் அமைப்பின் தலைவர் ஜெயராமன், மாநகராட்சி கமிஷனருக்கு இதுகுறித்து மனு ஒன்றை அளித்துள்ளார்.
மனுவில் அவர் கூறிஉள்ளதாவது:
மாநகராட்சியின் இந்த திட்டம் முற்றிலும் நியாயமற்றது. குறிப்பிட்ட இடங்களில் மட்டும் என, கூறப்படும் இத்திட்டம் வருங்காலத்தில், முற்றிலும் மாறும். பல்வேறு பகுதிகளில் மாநகராட்சி தனது கட்டண பார்க்கிங் பகுதிகளை ஏற்படுத்தியுள்ளது.
ஆனால், இங்குள்ள ஒப்பந்ததாரர்களின் மீது, பல்வேறு புகார்கள் தெரிவிக்கப்படுகின்றன. இதை மாநகராட்சியால் முறைப்படுத்த முடியவில்லை. வாகனங்கள் செல்ல மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டிய ரோடுகள், கட்டணம் செலுத்தி வாகன நிறுத்துமிடமாக மாறும் போது, போக்குவரத்து தடைபடும். கடை உரிமையாளர்கள், சொந்த வாகன நிறுத்தங்களை ஏற்படுத்த அறிவுறுத்த வேண்டும். அல்லது வாடிக்கையாளர்களை அருகில் உள்ள மாநகராட்சி வாகன காப்பகங்களில் நிறுத்த அறிவுறுத்த வேண்டும். சிறிய கடை நடத்துபவர்களும், அரசுக்கு வரி செலுத்துவதால் வாகன நிறுத்துமிடத்தை வழங்குவது மாநகராட்சியின் பொறுப்பு. போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, நகரின் நெரிசலான பகுதிகளில், மல்டி லெவல் பார்க்கிங் ஏற்படுத்துவதே நிரந்தர தீர்வு தரும். இதற்கு மாநகராட்சி நிர்வாகம் முன்வர வேண்டும்.
இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.