ADDED : செப் 18, 2024 01:11 AM

கோவை:கேரள மாநிலம், மலப்புரத்தைச் சேர்ந்த இளைஞர், பெங்களூரில் படித்து வந்தார். அண்மையில் அவர் கேரளா திரும்பினார். சில நாட்களில், அவருக்கு தொடர் காய்ச்சல் இருந்தது. உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சிகிச்சை பெற்று வந்த நிலையில், திடீரென உயிரிழந்தார். ரத்த மாதிரிகளை பரிசோதித்ததில், அவர் 'நிபா' வைரசால் பலியானது உறுதியானது.
கேரள மாநிலத்தின் மிக அருகில், கோவை மாவட்டம் உள்ளது. வணிகம், மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக, இரு மாநிலங்களுக்கு இடையே பலர் பயணிக்கின்றனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மாவட்ட சுகாதாரத்துறை சார்பில் எல்லைப்பகுதியில் சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
மாவட்ட சுகாதாரத் துறை துணை இயக்குனர் அருணா கூறுகையில், ''கேரளாவில் இருந்து வரும் வாகனங்களில், சோதனை நடத்தப்படுகிறது. குறிப்பாக, மலப்புரம் மாவட்டத்தில் இருந்து வருவோருக்கு சோதனை மேற்கொள்ளப்படுகிறது.
''காய்ச்சல் பாதிப்புடன் வருபவர்கள், சமீபத்தில் காய்ச்சல் ஏற்பட்டு குணமடைந்தவர்களும் பரிசோதிக்கப்படுகின்றனர். இதற்காக, தலா இருவர் கொண்ட மூன்று குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. காய்ச்சல் பாதிப்பு இருந்தால், அவர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது,'' என்றார்.