ADDED : ஜூலை 27, 2026 06:13 PM
பொதுமக்களை ஏமாற்றி பணம் பறித்தால்... இடைத்தரகர்களுக்கு சப்–கலெக்டர் எச்சரிக்கை
பொள்ளாச்சி: ‘இலவச வீட்டுமனைப்பட்டா வாங்கி தருவதாக கூறி அழைத்து வரும் இடைத்தரகர்களை நம்பி பொதுமக்கள் ஏமாற வேண்டாம். ஏதாவது புகார் வந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்,’’ என, பொள்ளாச்சி சப்–கலெக்டர் எச்சரிக்கை விடுத்தார். பொள்ளாச்சி வருவாய் கோட்டத்தில், பொள்ளாச்சி, ஆனைமலை, வால்பாறை மற்றும் கிணத்துக்கடவு தாலுகாக்கள் உள்ளன. இங்கு வசிக்கும் மக்களில் பலர் சொந்த வீடு இல்லாமல், வாடகை வீடு, கிராமங்களில் காலியாக உள்ள புறம்போக்கு நிலங்களில் குடிசை அமைத்தும் வசிக்கின்றனர்.
சொந்த வீடு இல்லாதோர், இடவசதியின்றி தவிப்போர், இலவச வீட்டு மனைப்பட்டா கேட்டு, சப் – கலெக்டர் அலுவலகத்தில் விண்ணப்பிப்பது வழக்கம். அவ்வாறு விண்ணப்பிப்பவர்களின் மனுக்கள் பரிசீலனை செய்து தகுதியான பயனாளியாக இருந்தால் பட்டா வழங்கப்படுகிறது.
இந்நிலையில், பட்டா வாங்கி தருவதாக கூறி மக்களை கூட்டமாக அழைத்து வந்து பணம் பறிக்கும் செயலில் ஒரு சிலர் ஈடுபடுகின்றனர். கிராமங்களில் வசிக்கும் மக்களின் அறியாமையை பயன்படுத்தி, குழுவாக சிலர் சென்று மக்களிடம் பேசி, சப் – கலெக்டர் அலுவலகத்தில் விண்ணப்பித்தால் பட்டா கிடைக்கும்.
வாருங்கள் நாங்கள் அழைத்துச் செல்கிறோம், அதிகாரிகளை கவனிக்க வேண்டும், ஒரு மனுவுக்கு, 100 முதல், 500 ரூபாய் வரை செலவாகும், உடனடியாக கொடுத்தால் பட்டா வாங்கலாம் என ஆசை வார்த்தை கூறுவதை நம்புகின்றனர்.
பணத்தை கொடுப்பதுடன், வேலைக்கு செல்லாமல் அவர்களை நம்பி, சப் – கலெக்டர் அலுவலகத்துக்கு கூட்டமாக மக்கள் வருகின்றனர். அங்கு அவர்கள், அனைவரையும் ஒருங்கிணைத்து விண்ணப்பத்தை கையில் கொடுத்து பதிவு செய்யக்கூறி சப் – கலெக்டரிடம் வழங்குகின்றனர்.
இது போன்ற நடைமுறையால், வாரத்துக்கு, 30 – 50 மனுக்கள் வரை இலவச வீட்டு மனைப்பட்டா கோரி வருகிறது. தற்போது ஆட்சி மாற்றத்தால் உடனடியாக பட்டா கிடைக்கும் என நம்பி, மக்களும் பணத்தை கொடுத்து ஏமாறுகின்றனர்.
சில வாரத்துக்கு முன், பொதுமக்களை அழைத்து வந்த கும்பலுக்குள், பணத்தை பங்கு பிரிப்பதில் சிக்கல் ஏற்பட்டு தகராறு வரை சென்றது. இதுபோன்று சம்பவங்கள் அவ்வப்போது நடக்கின்றன. இதை அறியாமல் மக்களும் பணத்தை கொடுத்து ஏமாறுவது தொடர்கிறது.
வீட்டு மனை பட்டா வாங்கி தருவதாக கூறும் கும்பல், பெரும்பாலும் பெண்களையே குறிவைத்து அழைத்து வருகின்றனர். இதனால்ல, பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து, பொள்ளாச்சி சப் – கலெக்டர் ராமகிருஷ்ணசாமியிடம் கேட்ட போது, அவர் கூறியதாவது:
பொள்ளாச்சி கோட்டத்தில் இலவச வீட்டுமனைப்பட்டா வேண்டுவோர், நேரிடையாக விண்ணப்பிக்கலாம். தகுதி வாய்ந்த பயனாளிகள் குறித்து பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்கப்படும. இடைத்தரகர்களை நம்பி பொதுமக்கள் ஏமாற வேண்டாம்.
பொதுமக்களை ஏமாற்றி பணம் பறிப்பதாக புகார் வருகிறது. விசாரித்து உண்மை கண்டறியப்பட்டால் பணம் பறிப்போர் மீது சட்டப்படி குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், சப் – கலெக்டர் அலுவலக வளாகத்தில் இது குறித்து விழிப்புணர்வு பிளக்ஸ் வைக்கப்பட உள்ளது.
இவ்வாறு, அவர் கூறினார்.
