/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வீடு தேடி வருகிறார் ஆனைமலை 'மந்திரவாதி!'
/
வீடு தேடி வருகிறார் ஆனைமலை 'மந்திரவாதி!'
ADDED : பிப் 24, 2025 11:53 PM

கோவை,; 'உங்க குடும்பத்துக்கு ஆபத்து வர காத்திருக்கு. வீட்டுல இருக்கற கெட்ட சக்தியை துரத்திட்டீங்கன்னா நிம்மதியா இருக்கலாம். அதுக்கு சில பூஜை செய்யணும்...'
- இப்படி உங்களை லேடீஸ் யாராவது மூளைச்சலவை செய்தால், உடனே உஷாராகி விடுங்கள். அத்தனையும் ஆனைமலை மந்திரவாதியின் தில்லாலங்கடி திட்டம்தான்!
யார் இந்த ஆனைமலை மந்திரவாதி என்பதை அறிய, இந்த சம்பவத்தை படியுங்கள்.
கடந்த 14ம் தேதி, இரண்டு பெண்கள் சுந்தராபுரம், சாரதா மில் ரோடு பகுதியில் உள்ள வீடுகளுக்கு 'விசிட்' அடித்தனர். ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில், குண்டம் இறங்க போவதாக கூறி நன்கொடை கேட்டுள்ளனர். மாசாணியம்மன் மீது பக்தி உள்ள பெண் ஒருவர், 200 ரூபாய் நன்கொடை கொடுத்துள்ளார்.
'கெட்ட சக்தியை விரட்டணும்'
'இவர்தான் நாம் தேடி வந்த நபர்' என்று பெண்கள் இருவரும், பரஸ்பர பார்வையால் தகவலை பரிமாறிக்கொண்டனர்.
உடனே அந்த பக்தையிடம் நைசாக, 'உங்க குடும்பத்திற்கு ஆபத்து காத்திருக்கும்மா.
வீட்டுல இருக்கற கெட்ட சக்தியை விரட்டணும்னா, சில பூஜைகள் செய்ய வேண்டியிருக்கு. மாசாணியம்மன் கோவில்ல மந்திரவாதி ஒருத்தர் இருக்கார். அவர் வந்து பூஜை செய்தால், கெட்டது எல்லாம் ஓடியே போயிரும்...' என்றெல்லாம் ரீல் விட்டுள்ளனர்.
இதை நம்பி விட்ட அந்த பெண்ணிடம், மொபைல் எண்ணையும் பெற்று சென்றுள்ளனர். அப்பெண்கள் சென்ற சில மணி நேரங்களில், பெண்ணின் மொபைல் போனுக்கு ஒரு அழைப்பு வந்துள்ளது. அதில் பேசிய ஒரு நபர், 'எம்பேரு வெற்றிமாறன். மாசாணியம்மன் கோவில்ல இருந்து பேசுறேன். அம்மா உங்க வீட்டுக்கு நேரா வந்து, சந்திக்க அருள்வாக்கு சொல்லியிருக்கா.
'பூஜைக்கு தேவையான பொருட்களை வாங்கி தயாரா வைங்க; நாளை அடியேன் வர்றேன்...' என்று தெரிவித்துள்ளார்.
வெள்ளை சட்டை...கழுத்தில் கொட்டை
மறுநாள் காலை, சுமார் 30 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் வெள்ளை சட்டை, கழுத்தில் ருத்திராட்ச கொட்டை, காவி வேட்டி சகிதம், ஒரு இருசக்கர வாகனத்தில் வந்து இறங்கியுள்ளார். வீட்டுக்குள் வந்த நபர், பூஜை செய்வதாக கூறி சில சித்து வேலைகளை செய்து, குடும்பத்தினரின் கவனத்தை திசை திருப்பி உள்ளார். 'உங்க வீட்டுல கெட்டது நடக்கப்போகுது. அதுக்கான எல்லா அறிகுறியும் இருக்கு' என்று திகிலுாட்டியுள்ளார்.
பயந்து போன அவர்களிடம், மாந்திரீகம் செய்வதாக கூறி ரூ.21,000 பணம், நான்கு கிராம் தங்க மோதிரம் ஆகியவற்றை சுருட்டிக் கொண்டு, அங்கிருந்து 'எஸ்கேப்' ஆகிவிட்டார்.அதன் பிறகு அவர் வரவேயில்லை. பணமும் நகைகளும் போனது போனதுதான்.
ஏமாந்த போலீஸ் ஏட்டு
'எதற்கும் இருக்கட்டும்' என, மந்திரவாதியின் பூஜைகள், சித்து வேலைகளை செல்போனில் எடுத்த வீடியோவுடன், இப்போது சுந்தராபுரம் போலீசில் புகார் அளித்துள்ளனர். போலீசார் சி.எஸ்.ஆர்., பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.
முதற்கட்ட விசாரணையில், முதலில் பெண்கள் இருவரை வீடு, வீடாக காணிக்கை பெறுவது போல் அனுப்பி, 'பல்ஸ்' பார்த்து சரியான 'ஏமாளியை' தேர்வு செய்வதும், பின் 'அம்மன் உத்தரவின்படி' அவரது வீட்டுக்கு விசிட் அடித்து பணம், நகை கொள்ளையடிப்பதும்தான் ஆனைமலை மந்திரவாதியின் 'சித்து வேலை' என தெரியவந்தது. இதே போன்று பல சம்பவங்கள், சுந்தராபுரம் சுற்றியுள்ள பகுதிகளில் நடந்திருப்பதும் தெரியவந்துள்ளது. அதில் போலீஸ் ஏட்டு ஒருவரும், 1200 ரூபாய், பட்டு சேலை கொடுத்து ஏமாந்ததுதான் தமாஷ்.
இதுபோன்று, கடவுள் பெயரை கூறி மக்களின் பணத்தை அபேஸ் செய்யும் போலி மந்திரவாதிகளிடம், மக்கள் உஷாராக இருக்க வேண்டும் என, போலீசார் எச்சரித்துள்ளனர்.