/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பேரூர் தர்ப்பண மண்டபம் கட்டுமான பணி நான்கு ஆண்டுகளாக இழுபறி
/
பேரூர் தர்ப்பண மண்டபம் கட்டுமான பணி நான்கு ஆண்டுகளாக இழுபறி
பேரூர் தர்ப்பண மண்டபம் கட்டுமான பணி நான்கு ஆண்டுகளாக இழுபறி
பேரூர் தர்ப்பண மண்டபம் கட்டுமான பணி நான்கு ஆண்டுகளாக இழுபறி
ADDED : ஏப் 23, 2024 10:32 PM

தொண்டாமுத்தூர் : பேரூர் படித்துறை நொய்யல் ஆற்றின் கரையில், பேரூர் பட்டீஸ்வரர் கோவில் நிர்வாகம் மற்றும் தனியார் அறக்கட்டளை சார்பில் கட்டப்பட்டு வரும் தர்ப்பண மண்டபம் கட்டுமான பணி, நான்கு ஆண்டுகளாக இழுபறியில் உள்ளது.
பேரூர் படித்துறை நொய்யல் ஆற்றின் கரையில், உயிரிழந்தவர்களுக்கு திதி, தர்ப்பணம் கொடுத்தால், அவர்கள் முக்தி பெறுவார்கள் என்பது ஐதீகம்.
இதன் காரணமாக, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மட்டுமல்லாமல், கேரளா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் இருந்தும், ஆடி அமாவாசை, புரட்டாசி அமாவாசை, தை அமாவாசை போன்ற நாட்களில், பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் இங்கு முன்னோர்களுக்கு, திதி கொடுத்து செல்வது வழக்கம்.
இங்கு, வசதிகள் போதுமான அளவிற்கு இல்லாததால், பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகி வந்தனர்.
அதோடு, நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் போது, தர்ப்பண மண்டபத்திற்குள்ளும் வெள்ள நீர் புகும்.
இந்நிலையில், பேரூர் பட்டீஸ்வரர் கோவில் நிர்வாகம் மற்றும் தனியார் அறக்கட்டளை சார்பில், பேரூர் படித்துறையில் உள்ள பேரூர் பட்டீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான 2.75 ஏக்கர் இடத்தில், பல்வேறு வசதிகளுடன் கூடிய புதிய தர்ப்பண மண்டபம் கட்டும் பணி, 2020ம் ஆண்டு பூமி பூஜையுடன் துவங்கியது.
ஆனால், 4 ஆண்டுகள் ஆகும் நிலையிலும், இன்னும் முடியவில்லை. விரைந்து பணிகளை முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என, பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
'90 சதவீத பணிகள் ஓவர்'
பேரூர் பட்டீஸ்வரர் கோவில் உதவி கமிஷனர் (பொ) விமலா கூறுகையில், கொரோனா காரணமாக, கட்டுமான பொருட்கள் கொண்டு வருவதில் சிக்கல் ஏற்பட்டு, காலதாமதம் ஏற்பட்டது. தற்போது, 90 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளன. வரும் ஜூன் மாதத்தில், தர்ப்பண மண்டபம் திறக்கப்படும்,என்றார்.

