/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோடை மழையில் டெங்கு கொசு உற்பத்தி அபாயம் பொது மக்கள் உஷாராக இருக்க மாநகராட்சி அறிவுரை
/
கோடை மழையில் டெங்கு கொசு உற்பத்தி அபாயம் பொது மக்கள் உஷாராக இருக்க மாநகராட்சி அறிவுரை
கோடை மழையில் டெங்கு கொசு உற்பத்தி அபாயம் பொது மக்கள் உஷாராக இருக்க மாநகராட்சி அறிவுரை
கோடை மழையில் டெங்கு கொசு உற்பத்தி அபாயம் பொது மக்கள் உஷாராக இருக்க மாநகராட்சி அறிவுரை
ADDED : மே 16, 2024 04:32 AM
கோவை : இரவு நேரங்களில் மழை பெய்துவரும் நிலையில் நன்னீர் தேங்கி 'ஏடிஸ்' கொசு உற்பத்திக்கு வழிவகுத்துள்ளது; டெங்கு தடுப்பு நடவடிக்கைகளுக்கு பொது மக்களும் ஒத்துழைக்க வேண்டுகோள் எழுந்துள்ளது.
கோவையில் தினமும் வெயில் சதம் அடித்து மக்களை வாட்டி வதைத்து வந்தது. வெப்பச்சலனம் அதிகரித்து தற்போது இரவு நேரங்களில் கோடை மழை பெய்துவருகிறது. இதனால், சாலை, குடியிருப்பு பகுதிகளில் ஆங்காங்கே நன்னீர் தேங்கி, டெங்கு பாதிப்பை ஏற்படுத்தும் 'ஏடிஸ்' கொசு உற்பத்திக்கு வழிவகை ஏற்பட்டுள்ளது.
மழை காலத்தில் டெங்கு பாதிப்பு தலைதுாக்கும் நிலை மாறி வெயில் காலத்திலும் பாதிப்பு காணப்படுகிறது. எனவே, மாநகராட்சி நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது.
தற்போது இரவு நேர மழையால் ரோடு, மழைநீர் வடிகால் மட்டுமின்றி காலி மனைகளிலும் மழை நீர் தேங்குகிறது. எனவே, பொது மக்களும் போதிய ஒத்துழைப்பு வழங்குமாறு மாநகராட்சி நிர்வாகம் வேண்டுகோள்விடுத்துள்ளது. அதன்படி, பொது மக்கள் தங்களது வீட்டு மொட்டை மாடி, சுற்றுப்புறங்களில் தண்ணீர் தேங்கும் வகையில் உள்ள பொருட்களை உடனடியாக அகற்ற வேண்டும். 'ரெப்ரிஜரேட்டர்' பின்புறம் தேங்கும் நீரை அவ்வப்போது அகற்றுவது அவசியம்.
தேங்காய் சிரட்டை, மட்டைகள், டயர், பிளாஸ்டிக் டப்பாக்களை வெளியே வீசுவதை தவிர்க்க வேண்டும்.
தங்களையும், தங்களது குடும்பத்தினரையும் பாதுகாத்துக்கொள்ள, சுற்றுப்புறத்தை துாய்மையாக பராமரித்தால் பாதிப்புகளை தவிர்க்க முடியும் என்கின்றனர் மாநகராட்சி அதிகாரிகள்.
தொடர் நடவடிக்கை!
மாநகராட்சி நகர்நல அலுவலர் பூபதி கூறுகையில்,''டெங்கு ஒழிப்பு பணியாளர்கள், 800 பேர் நோய் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
காய்ச்சல் பாதிப்புக்கு உள்ளாகும் பகுதிகளில் மட்டுமின்றி 'ஹாட் ஸ்பாட்' எனப்படும் டெங்கு பாதிப்பு திரும்ப திரும்ப ஏற்படும் பகுதி களில் அதிக கவனம் செலுத்துகிறோம்.
தற்போது, டெங்கு பாதிப்புக்குள்ளாகி ஒன்று, இரண்டு பேர் மட்டுமே சிகிச்சைக்கு வருகின்றனர். பொது மக்களும் தேவையற்ற பொருட்களை அகற்றி ஒத்துழைக்க வேண்டும்,'' என்றார்.