/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு :சாலைப்பணிகள் வேகம்
/
போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு :சாலைப்பணிகள் வேகம்
போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு :சாலைப்பணிகள் வேகம்
போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு :சாலைப்பணிகள் வேகம்
ADDED : மே 10, 2024 10:33 PM

அன்னுார்;அன்னுார் நகரின் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வாக, ஒரு கோடியே ஆறு லட்சம் ரூபாயில் குளக்கரையில் சாலை அமைக்கும் பணி வேகம் பெற்றுள்ளது.
கோவை சத்தி தேசிய நெடுஞ்சாலைக்கும், அவிநாசி மேட்டுப்பாளையம் மாநில நெடுஞ்சாலைக்கும் மையமாக அன்னுார் உள்ளது. தினமும் பல ஆயிரம் வாகனங்கள் இந்த வழித்தடத்தில் செல்கின்றன.
இதனால் முகூர்த்த நாட்களிலும், காலை, மாலை வேலைகளிலும், கடும் போக்குவரத்து நெரிசல் நீடிக்கிறது. வாகனங்கள் பல கி.மீ., தூரத்திற்கு நெரிசலில் சிக்கி தவிக்கின்றன.
கடந்த 25 ஆண்டுகளாக மக்கள் புறவழிச்சாலை அமைக்க வேண்டும். சாலையை அகலப்படுத்த வேண்டும் என கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்நிலையில் அன்னுாரில் மேட்டுப்பாளையம் சாலையையும் ஓதிமலை சாலை மற்றும் அவிநாசி சாலையையும் இணைக்கும் வகையில் குளக்கரையில் சாலை அமைக்க ஒப்புதல் அளிக்க கோரி பேரூராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அரசுக்கு அனுப்பப்பட்டது. இதற்கு நகர்ப்புற வளர்ச்சித் துறை மற்றும் பொதுப்பணி துறை அனுமதி வழங்கின. இதைத்தொடர்ந்து ஒரு கோடியே 6 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. நிதி ஒதுக்கி பூமி பூஜை போடப்பட்டு மூன்று மாதங்கள் ஆகிவிட்டது. ஆனால் பணி நடைபெறாமல் முடங்கிக் கிடந்தது.
இந்நிலையில் நேற்று முன்தினம் பணி துவங்கி இரண்டு நாட்களாக குளக்கரையில் சாலை அமைக்கும் பணி வேகமாக நடந்து வருகிறது. இதையடுத்து ஓதிமலை சாலை, சத்தி சாலை, இட்டேரி சாலை வழியாக நாகமாபுதூர் வரையும் இப்பணி தொடர்ந்து நடைபெறும்.
விரைவில் பணி முடிக்கப்பட்டால் அன்னுார் நகரில் போக்குவரத்து நெரிசல் குறையும், என அங்கு ஆய்வு செய்த பேரூராட்சி தலைவர் பரமேஸ்வரன் மற்றும் பேரூராட்சி அலுவலர்கள் தெரிவித்தனர்.