/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சிறுவாணியில் தண்ணீர் திறப்பது நிறுத்தம்: நீர்வரத்து குறைந்ததன் எதிரொலி
/
சிறுவாணியில் தண்ணீர் திறப்பது நிறுத்தம்: நீர்வரத்து குறைந்ததன் எதிரொலி
சிறுவாணியில் தண்ணீர் திறப்பது நிறுத்தம்: நீர்வரத்து குறைந்ததன் எதிரொலி
சிறுவாணியில் தண்ணீர் திறப்பது நிறுத்தம்: நீர்வரத்து குறைந்ததன் எதிரொலி
ADDED : ஜூலை 22, 2024 01:15 AM
கோவை:நீர்வரத்து குறைந்ததால், சிறுவாணி அணையில் இருந்து நீர் திறப்பதை, கேரள நீர்பாசனத்துறை அதிகாரிகள் நிறுத்தியுள்ளனர்.
கோவையின் முக்கிய நீராதாரங்களில் ஒன்று சிறுவாணி அணை. மேற்குத் தொடர்ச்சி மலையில், கேரள மாநிலத்தில் அமைந்துள்ளது.
அணையின் மொத்த உயரமான, 50 அடிக்கு நீர் தேக்காமல், பாதுகாப்பு காரணங்களை கூறி, 45 அடி மட்டுமே கேரள அரசு தேக்குகிறது.
கடந்த மூன்று தினங்களுக்கு முன், 42 அடியாக அணையின் நீர்மட்டம் இருந்த நிலையில், கேரள நீர்பாசனத்துறை அதிகாரிகள், அணையில் இருந்து, 1000 கனஅடி நீரை வெளியேற்றினர். இது தமிழக நீர்பாசனத் துறை அதிகாரிகளிடையே, அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
நீர்வரத்து அதிகம் இருப்பதால், நீர் வெளியேற்றப்படுவதாக கேரள நீர்பாசனத்துறை அதிகாரிகள் விளக்கம் அளித்தனர். இது குறித்து, நமது நாளிதழில் நேற்று செய்தி வெளியானது.
இந்நிலையில், சிறுவாணி அணைப்பகுதியில் மழைபொழிவு குறைந்தது. நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி அடிவாரம் மற்றும் அணைப்பகுதியில் தலா, 8 மி.மீ., மழைபொழிவு பதிவாகியிருந்தது.
இதையடுத்து அணையின் நீர்மட்டம், 41.69 அடியாக இருந்தது. அணையில் இருந்து, 10.225 கோடி லிட்டர் நீர், குடிநீருக்காக எடுக்கப்பட்டு வருகிறது.
மழைப்பொழிவு குறைந்ததால், அணைக்கு நீர்வரத்து குறைந்தது. இதையடுத்து தண்ணீர் திறந்து விடுவதை, கேரள நீர்பாசனத்துறையினர் தற்காலிகமாக நிறுத்தியுள்ளதாக, நீர்பாசனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.