/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பத்திரப்பதிவு தடையால் சார் பதிவாளர் அலுவலகம் முற்றுகை
/
பத்திரப்பதிவு தடையால் சார் பதிவாளர் அலுவலகம் முற்றுகை
பத்திரப்பதிவு தடையால் சார் பதிவாளர் அலுவலகம் முற்றுகை
பத்திரப்பதிவு தடையால் சார் பதிவாளர் அலுவலகம் முற்றுகை
ADDED : செப் 03, 2024 07:04 AM

அன்னுார் : கோவை அருகே ஆறு ஊராட்சிகளில் பத்திரப்பதிவு செய்ய மூன்று நாள் தடை விதித்ததை கண்டித்து விவசாயிகள் முற்றுகை போராட்டம் நடத்தினர்.
கோவை மாவட்டம், அன்னுார் மற்றும் மேட்டுப்பாளையம் தாலுகாவில் ஆறு ஊராட்சிகளில் 3,850 ஏக்கரில் தொழில் பூங்கா அமைப்பதாக கடந்த 2021ல் தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம் அறிவித்தது. விவசாயிகளின் போராட்டத்தை அடுத்து, தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பில், 'விவசாயிகள் மற்றும் பொதுமக்களிடமிருந்து நிலம் கையகப்படுத்தப்பட மாட்டாது' என தெரிவித்தது. இதனால் விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டனர்.
இந்நிலையில் கடந்த 27ம் தேதி அன்னுார் மற்றும் புளியம்பட்டி சார் பதிவாளர் அலுவலகங்களில் தொழில் பூங்காவுக்கு என அறிவிக்கப்பட்ட நிலங்களை வாங்கவோ, விற்கவோ அடமானம் செய்யவோ முடியாது என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த நமது நிலம் நமதே என்னும் அமைப்பினர் கடந்த வியாழன்று எல்.கோவில் பாளையத்தில் காத்திருப்பு போராட்டம் நடத்தினர். அப்போது சார் பதிவாளர் செல்வ பாலமுருகன் தொழில் பூங்கா அமைய உள்ள நிலங்களில் பத்திர பதிவு செய்யலாம். தடை இல்லை என தெரிவித்தார்.
எனினும் நமது நிலம் நமதே அமைப்பினர் மற்றும் விவசாயிகள் மூன்று நாட்கள் பத்திர பதிவு செய்ய தடை விதித்ததால் விவசாயிகள் பொதுமக்கள் கடும் இடையூறுக்கு ஆளாகியுள்ளோம்.
எந்தவித அரசாணையும் இல்லாமல் பத்திரப்பதிவுக்கு மூன்று நாள் தடை விதித்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, அன்னுார் சார் பதிவாளர் அலுவலகத்தை நேற்று காலை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
துணை தாசில்தார் ரேவதி மற்றும் சார் பதிவாளர் செல்வ பாலமுருகன் பேச்சு நடத்தினர்.
இதில் அதிகாரிகள் தரப்பில் வருத்தம் தெரிவிக்கப்பட்டது. தொழில் பூங்காவுக்கு அறிவிக்கப்பட்ட நிலங்களை வாங்க, விற்க, அடமானம் செய்ய எந்த தடையும் இல்லை,' என்று தெரிவித்தனர்.
நமது நிலம் நமதே அமைப்பின் தலைவர் குமார ரவிக்குமார் பேசுகையில், ''தொழில் பூங்கா அமைக்க ஒரு சதுர அடி விவசாய நிலம் கூட கையகப்படுத்த விடமாட்டோம். எங்கள் உயிரை கொடுத்தாவது விவசாய நிலங்களை காப்போம், என்றார்.
இதைத்தொடர்ந்து விவசாயிகள் கலைந்து சென்றனர்.