/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அவிநாசி ரோட்டில் சுரங்கப்பாதைகள் கிடையாது லிப்ட் வசதியுடன் 2 இடங்களில் நடை மேம்பாலம் வருகிறது
/
அவிநாசி ரோட்டில் சுரங்கப்பாதைகள் கிடையாது லிப்ட் வசதியுடன் 2 இடங்களில் நடை மேம்பாலம் வருகிறது
அவிநாசி ரோட்டில் சுரங்கப்பாதைகள் கிடையாது லிப்ட் வசதியுடன் 2 இடங்களில் நடை மேம்பாலம் வருகிறது
அவிநாசி ரோட்டில் சுரங்கப்பாதைகள் கிடையாது லிப்ட் வசதியுடன் 2 இடங்களில் நடை மேம்பாலம் வருகிறது
ADDED : ஜூலை 07, 2024 12:44 AM

கோவை:கோவை காந்திபுரம், உக்கடத்தில் லிப்ட் மற்றும் எஸ்கலேட்டர் வசதியுடன் இரு நடை மேம்பாலங்கள் மாநகராட்சி சார்பிலும், அவிநாசி ரோட்டில் இரு இடங்களில் மாநில நெடுஞ்சாலைத்துறை சார்பிலும், லிப்ட் வசதியுடன் நடை மேம்பாலங்கள் கட்டுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
கோவை நகர் பகுதியில், வாகன போக்குவரத்துக்கு இடையே ரோட்டை கடக்க, பாதசாரிகள் மிகவும் சிரமப்படுவதால், நடை மேம்பாலம் அமைக்க, மாநகர போலீசார் கோரிக்கை விடுத்தனர். இதுதொடர்பாக, சாலை பாதுகாப்பு குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
அப்போது, படிக்கட்டுகளுடன் நடை மேம்பாலம் அமைத்தால், பொதுமக்கள் பயன்படுத்துவதில்லை என்பதால், லிப்ட் அல்லது எஸ்கலேட்டர் வசதி செய்ய வேண்டுமென, கலெக்டர் கிராந்திகுமார் அறிவுறுத்தினார்.
அவிநாசி ரோட்டில் மாநில நெடுஞ்சாலைத்துறை மூலமாக மேம்பாலப் பணிகள் நடப்பதால், அத்துறையினர் மூலமாக, லட்சுமி மில்ஸ் சந்திப்பில் நடை மேம்பாலம் கட்டுவதற்கு சாத்தியக்கூறு இருக்கிறது.
காந்திபுரம் மற்றும் உக்கடம் பஸ் ஸ்டாண்ட் பகுதியில், எஸ்கலேட்டர் மற்றும் லிப்ட் வசதியுடன் நடை மேம்பாலம் கட்டுவதற்கு, நிலவியல் சர்வே எடுக்கும் பணியை மாநகராட்சி துவக்கியுள்ளது.
காந்திபுரத்தில் சென்ட்ரல் பஸ் ஸ்டாண்ட் மற்றும் டவுன் பஸ் ஸ்டாண்ட் மற்றும் விரைவு பஸ் ஸ்டாண்ட் செல்லும் வகையில், கிராஸ்கட் ரோட்டில் இறங்கும் வகையிலும் வழித்தடம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
உக்கடம் பஸ் ஸ்டாண்ட் வளாகத்தை, ரூ.20 கோடியில் புதுப்பிக்க விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்படுகிறது. மீன் மார்க்கெட் அருகே மேம்பாலம் இறங்குதளம் பகுதியில் உள்ள காலியிடத்தில், ஒரு பஸ் ஸ்டாண்ட் மற்றும் தற்போதுள்ள பகுதியில் ஒரு பஸ் ஸ்டாண்ட் என இரு பிரிவாக பிரித்து கட்டுவதற்கும், இரு பஸ் ஸ்டாண்ட்டுக்கு இணைப்பு பாலமாக, நடை மேம்பாலம் கட்டுவதற்கு ஆலோசிக்கப்பட்டுள்ளது.
ஆனால், 'மெட்ரோ' ரயில் திட்டத்தில், உக்கடம் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் ஜங்சன் வருகிறது. மத்திய அரசு ஒப்புதல் வழங்கி நிதி ஒதுக்கி விட்டால், பணிகள் உடனடியாக துவங்கி விடும்; 'மெட்ரோ' ரயில் திட்டம், மூன்று முதல் மூன்றரை ஆண்டுக்குள் முடித்து விடும் என, மெட்ரோ ரயில் நிறுவனத்தினர் கூறுகின்றனர்.
அதனால், உக்கடம் சந்திப்பு பகுதியில் நடைமேம்பாலம் மட்டும் புதிய பஸ் ஸ்டாண்ட் உருவாக்குவதற்கு முன், மெட்ரோ ரயில் நிறுவனத்துடன் ஆலோசித்து முடிவெடுக்க வேண்டிய கட்டாயம், மாநகராட்சிக்கு ஏற்பட்டுள்ளது.
அவிநாசி ரோட்டில் செயல்படுத்த உத்தேசித்துள்ள, 'மெட்ரோ' ரயில் திட்டத்தில் சுரங்கப்பாதை அமைக்க வாய்ப்புள்ளதால், மாநில நெடுஞ்சாலைத்துறையால் கட்டப்படும் மேம்பாலப் பணிகளில், ஐந்து இடங்களில் சுரங்க நடைபாலம் கட்டும் திட்டம் கைவிடப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக, உயர்மட்ட நடை மேம்பாலம் கட்டலாம் என, மாவட்ட நிர்வாகத்திடம் மாநில நெடுஞ்சாலைத்துறை தெரிவித்திருக்கிறது.
அதில், முதல்கட்டமாக, சிட்ரா அருகே காளப்பட்டி ரோடு - விமான நிலைய ரோடு சந்திப்பு; கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லுாரி முன்பு என, இரு இடங்களில் லிப்ட் வசதியுடன் உயர்மட்ட நடை மேம்பாலம் அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது.
இதற்கான மதிப்பீடு தயாரிக்கும் பணி நடந்து வருகிறது. இவ்விரு இடங்களில் பயன்பாட்டுக்கு கொண்டு வந்தபின், மக்களுக்கு பயனுள்ளதாக இருப்பின், மீதமுள்ள மூன்று இடங்களில் அமைக்க, மாநில நெடுஞ்சாலைத்துறையினர் முடிவு செய்துள்ளனர்.