ADDED : மார் 13, 2025 05:55 AM
கோவை; மாநகராட்சி பகுதி மக்களுக்கு குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் அளவுக்கு, போதிய நீராதாரம் உள்ளதாக, மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மாநகராட்சி பகுதி மக்களுக்கு சிறுவாணி, பில்லுார்-1, பில்லுார்-2, பில்லுார்-3, ஆழியாறு மற்றும் பவானி ஆகிய ஆறு குடிநீர் திட்டங்கள் வாயிலாக, குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. அதன்படி, சிறுவாணி அணையின் மொத்த நீர்த்தேக்க உயரமான, 50 அடி என்ற நிலையில் தற்போது, 30.47 அடிக்கு தண்ணீர் உள்ளது.
100 அடி அளவுள்ள பில்லுார் அணையில் தற்போது, 80 அடிக்கும், 120 அடி கொண்ட ஆழியாறு அணையில், 73.45 அடிக்கும் தண்ணீர் உள்ளது.
இந்த நீராதாரங்களில், போதிய அளவு தண்ணீர் இருப்பு உள்ளதால் தினமும் சராசரியாக, 29 கோடி லிட்டர் குடிநீர் வினியோகிக்கப்பட்டு வருகிறது. எனவே, போதிய நீர் ஆதாரம் உள்ளதாக, மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.