/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரோடு போட வேண்டிய துாரம் இன்னும் அதிகம்
/
ரோடு போட வேண்டிய துாரம் இன்னும் அதிகம்
ADDED : பிப் 24, 2025 11:55 PM

கோவை; கோவை - பாலக்காடு ரோட்டில், குனியமுத்துார் பகுதியில், 300 மீட்டர் துாரத்துக்கு இன்னும் தார் ரோடு போட வேண்டியிருக்கிறது.
கோவை - பாலக்காடு ரோட்டில், குனியமுத்துார் பகுதியில், 9 கி.மீ., துாரத்துக்கு பாதாள சாக்கடை குழாய் பதிக்கும் பணி படுமந்தமாக நடந்தது. குழாய் பதித்த இடங்களில் ரோட்டை சீரமைக்கும் பணியும் உடனுக்குடன் மேற்கொள்ளாததால், அவ்வழியாகச் சென்ற மக்கள் அதிருப்தி அடைந்தனர். குனியமுத்துார் பஸ் ஸ்டாப் பகுதியில், 3 கி.மீ., துாரத்துக்கு வாகனங்களில் செல்ல முடியாத அளவுக்கு, குண்டும் குழியுமாக காணப்பட்டது. பல்வேறு தரப்புகளில் இருந்து புகார் எழுந்ததும், மாவட்ட சாலை பாதுகாப்பு கமிட்டி கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
அதில், மாநில நெடுஞ்சாலைத்துறை, குடிநீர் வடிகால் வாரியம் மற்றும் போக்குவரத்து போலீசார் இணைந்து கூட்டாய்வு செய்ய மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியது. பாதாள சாக்கடை குழாய் பதித்த இடங்களில் சாலை அமைத்துக் கொள்ள, குடிநீர் வடிகால் வாரியம் அறிவுறுத்தியது. இதைத்தொடர்ந்து, மாநில நெடுஞ்சாலைத்துறை சார்பில், தார் ரோடு போடும் பணி இரவு நேரங்களில் மேற்கொள்ளப்படுகிறது.
குனியமுத்துார் வஹாப் பெட்ரோல் பங்க் வரை, தார் ரோடு போடப்பட்டு இருக்கிறது. அரசு மேல்நிலைப்பள்ளி வரை இன்னும், 300 மீட்டர் துாரத்துக்கு ரோடு போட வேண்டியுள்ளது.
மாநில நெடுஞ்சாலைத்துறையினர் கூறுகையில், 'பாலக்காடு ரோட்டில் குனியமுத்துார் பகுதியில் தார் ரோடு போடும் பணி, இன்னும் சில நாட்களில் முடியும். அடுத்த கட்டமாக, குறிச்சி பிரிவில் 'ரவுண்டானா' அமைக்கும் பணியை, துவக்க இருக்கிறோம்' என்றனர்.

