/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கொரோனா தடுப்பூசி போட்டவர்கள் பயப்பட வேண்டாம்! தைரியம் தருகிறார் அரசு மருத்துவர்
/
கொரோனா தடுப்பூசி போட்டவர்கள் பயப்பட வேண்டாம்! தைரியம் தருகிறார் அரசு மருத்துவர்
கொரோனா தடுப்பூசி போட்டவர்கள் பயப்பட வேண்டாம்! தைரியம் தருகிறார் அரசு மருத்துவர்
கொரோனா தடுப்பூசி போட்டவர்கள் பயப்பட வேண்டாம்! தைரியம் தருகிறார் அரசு மருத்துவர்
ADDED : மே 02, 2024 11:15 PM

- நமது நிருபர் -
தடுப்பூசி போட்ட மூன்று மாதங்களுக்குள் பக்கவிளைவுகள் ஏற்படும்; அதன் பின் பாதிப்பு இருக்காது என்பதால், தடுப்பூசி போட்டவர்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என, டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
கொரோனா பாதிப்பால், இந்தியாவில், கோவிஷீல்டு, கோவாக்சின் ஆகிய தடுப்பூசிகளை பலரும் போட்டுக் கொண்டனர்.
கோவாக்சின், கோவிஷீல்டு தடுப்பூசிகள் மூன்று தவணைகளாக போடப்பட்டன. இந்தியாவில் மட்டும், 175 கோடி டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசி போடப்பட்டது.
இந்நிலையில், இங்கிலாந்து கோர்ட்டுகளில் தொடரப்பட்ட வழக்குகளுக்கு பதிலளித்த கோவிஷீல்டு தடுப்பூசியை தயாரித்த, ஆஸ்ட்ரா ஜெனேகா நிறுவனம், தங்கள் தடுப்பூசியால், ரத்தத்தை உறைய வைக்கும் நோய் ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரிவித்தது. இது பல்வேறு தரப்பிலும், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தங்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்ற எண்ணத்தில், பலரும் டாக்டர்களிடம் ஆலோசனை கேட்பது அதிகரித்துள்ளது. ஆனால், இதுகுறித்து அச்சம் கொள்ளத் தேவையில்லை என டாக்டர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
கோவை அரசு மருத்துவமனை இருதயவியல் துறை தலைவர் நம்பிராஜன் கூறியதாவது:
எந்த ஒரு தடுப்பூசியாக இருந்தாலும், அதை போட்டுக் கொண்ட ஓரிரு மாதங்களுக்குள் பக்கவிளைவுகள் ஏற்பட்டு முடிந்து விடும். மூன்றாண்டுகளுக்கு பின், பக்கவிளைவுகள் ஏற்படும் என்பதற்கான, எந்த ஒரு அறிவியல் பூர்வமான நிரூபணமும் இல்லை.
கடந்த இரு ஆண்டுகளில், மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளிடம், 'தடுப்பூசி போட்டீர்களா' எனக் கேட்கிறோம். தடுப்பூசி போட்டவர்களை விட, போடாதவர்களுக்கே அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக, நுரையீரல் ரத்தக்குழாயில் அடைப்பு ஏற்பட்டு, சிகிச்சைக்காக வருவோருக்கு, தடுப்பூசி போட்டதால் பாதிப்பு இல்லை.
தடுப்பூசி போட்டவர்களுக்கு இருதயம், நுரையீரல், மூளைக்கு செல்லும் ரத்தக் குழாய்களில் பாதிப்பு ஏற்படுவதாக, எந்த ஆய்விலும் தெளிவுபடுத்தப்படவில்லை.
இயற்கையாகவே ஏதாவது ஒரு தடுப்பூசி போடும் போது, பிளேட்லெட்டுகள் குறையும். ஆனால் தடுப்பூசி போட்டுக் கொண்டதால், பாதிப்பு ஏற்படாது. அதனால் அச்சம் கொள்ளத்தேவையில்லை.
இவ்வாறு, அவர் கூறினார்.