/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'தில்லுமுல்லு' தீர்மானம்; முதல்வருக்கு புகார் கடிதம்
/
'தில்லுமுல்லு' தீர்மானம்; முதல்வருக்கு புகார் கடிதம்
'தில்லுமுல்லு' தீர்மானம்; முதல்வருக்கு புகார் கடிதம்
'தில்லுமுல்லு' தீர்மானம்; முதல்வருக்கு புகார் கடிதம்
ADDED : ஆக 04, 2024 10:59 PM
கோவை : கோவை மாநகராட்சியில், சமீபத்தில் நடந்த மாமன்ற கூட்டத்தில், எவ்வித விவாதமின்றி, 333 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில், தில்லுமுல்லு நடந்திருப்பதாக, முதல்வர் ஸ்டாலினுக்கு புகார் கடிதம் அனுப்பப்பட்டிருக்கிறது.
கோவை மாநகராட்சியில், கடந்த ஜூலை 26ம் தேதி (வெள்ளிக்கிழமை), துணை மேயர் வெற்றிச்செல்வன் தலைமையில் மாமன்ற கூட்டம் நடத்தப்பட்டது. எவ்வித விவாதமின்றி, 333 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
பல தீர்மானங்களுக்கு ஆளுங்கட்சியான தி.மு.க., கவுன்சிலர்கள் மாற்றுக்கருத்து கூறிய போதிலும், அதை ஏற்காமல், அவசரகதியில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
மிக முக்கியமாக, 151 தீர்மானமாக, 102 மனைப்பிரிவுகளுக்கு ஒப்புதல் அளிப்பது குறித்து, நகரமைப்பு மற்றும் அபிவிருத்தி குழுவுக்கு அனுப்பாமல், நேரடியாக மன்றத்தின் பார்வைக்கு கொண்டு வரப்பட்டிருந்தது.
இது, அரசாணையை மீறிய செயல். மன்றத்தில் நகரமைப்பு குழுவினர் இதுதொடர்பாக விளக்கம் கேட்டதோடு, தீர்மானத்தை நிறுத்தி வைக்க அறிவுறுத்தினார். அதை கேட்காமல், நிறைவேற்றப்பட்டது.
இதுதொடர்பாக, மாநகராட்சி நகரமைப்பு மற்றும் அபிவிருத்தி குழு தலைவர் சந்தோஷ், முதல்வர் ஸ்டாலினுக்கு புகார் கடிதம் அனுப்பியுள்ளார். இதன் நகல் அமைச்சர்கள் உதயநிதி, நேரு மற்றும் முத்துசாமி ஆகியோருக்கும் அனுப்பப்பட்டிருக்கிறது.
அக்கடிதத்தில் கூறியிருப்பதாவது:
கோவை மாநகராட்சியில், ஜூலை 26ல் மாமன்ற கூட்டம் நடந்தது. தீர்மாண எண்: 151ல் 102 மனைப்பிரிவு எண்கள் குறிப்பிடப்பட்டு இருந்தது; ஆனால், 121 மனைப்பிரிவுகள் இருக்கின்றன. இதில், 2013 முதல் 2022 வரையிலான, 17 பைல்கள் சேர்க்கப்பட்டிருந்தன. இவை பற்றிய தகவல்கள் நகரமைப்பு குழுவுக்கு வரவில்லை.
கூட்டம் நடப்பதற்கு ஆறு நாட்களுக்கு முன், 109 தீர்மான பொருள்கள் வந்தன. 110 முதல், 316 வரையிலான தீர்மான பொருள்கள், 25ம் தேதி வந்தன; 317 முதல், 327 வரை, 25ம் தேதி மாலை கொடுக்கப்பட்டது; 328 முதல் 333 வரை, 25ம் தேதி இரவு, 11:00 மணிக்கு வந்தது.
இறுதி நேரத்தில், கவுன்சிலர்களுக்கு வழங்கப்பட்டதால் தான், 318 எண்ணுள்ள வெள்ளலுார் குப்பை கிடங்கு சம்பந்தமான பொருள், அரசுக்கும் மாநகராட்சிக்கும் சங்கடமான சூழ்நிலையை ஏற்படுத்தியது.
குழுவின் பார்வைக்கு பொருள் வைக்காமல், நேரடியாக மாமன்றத்துக்குச் செல்வதால், பல்வேறு விமர்சனங்களுக்கு மாநகராட்சி உள்ளாகிறது. இதுபோன்ற தவறுகள் நடைபெறாமல் இருக்க, குழுவின் பார்வைக்கு பொருள்கள் வைக்கப்பட்டு, ஆய்வுக்கு உட்படுத்தி, மாமன்றத்துக்கு கொண்டு வர வேண்டும்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.