/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாநகரில் இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள்
/
மாநகரில் இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள்
ADDED : ஏப் 28, 2024 01:57 AM

பெருந்திருவிழா
அவிநாசி ரோடு, தண்டுமாரியம்மன் கோவிலில், சித்திரைப் பெருந்திருவிழா நடக்கிறது. காலை, 7:00 மணிக்கு, சங்காபிஷேகம், இரவு, 7:00 மணிக்கு, வசந்த உற்சவம் நடக்கிறது. இரவு, 7:05 மணி முதல், இன்னிசை மற்றும் நாட்டிய நடன நிகழ்ச்சி நடக்கிறது.
மண்டல பூஜை
கோவை காமாட்சிபுரி ஆதினம் 51 சக்தி பீடம் மகாசமஸ்தானம், ஞானகுரு சாக்த சிவலிங்கேஸ்வர சுவாமிகள், 48ம் நாள் மண்டல பூஜை நடக்கிறது. காலை, 10:00 முதல் மதியம், 1:00 மணி வரை, வேள்வி வழிபாடு, 108 சங்காபிஷகேம் மற்றும் தீபாராதனை ஆகியவை நடக்கிறது.
சித்திரைத் திருவிழா
குனியமுத்துார், அறம்வளர்த்த அம்மன் கோவிலில், சித்திரைத் திருவிழா, கடந்த 14ம் தேதி முதல் நடந்து வருகிறது. இன்று, மாலை, 6:00 மணிக்கு, சுந்தராபுரம் கலாஷேத்ரா வழங்கும் பரதநாட்டிய நிகழ்ச்சி நடக்கிறது.
பட்டமளிப்பு விழா
பாலக்காடு மெயின் ரோடு, நவக்கரை, ஈசா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லுாரியில், 11வது பட்டமளிப்பு விழா நடக்கிறது. காலை, 11:00 மணிக்கு நடக்கும் விழாவில், ஆடி நிறுவனத்தின் கோவை மற்றும் மதுரை சி.இ.ஒ., அருண் விருந்தினராக கலந்துகொள்கிறார்.
ஆண்டு விழா
கோவை இதயங்கள் அறக்கட்டளை, தமிழ்நாடு முழுவதும் முதல்வகை சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட, ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு பல்வேறு உதவிகளை வழங்கி வருகிறது. அறக்கட்டளையின் ஏழாம் ஆண்டு விழா இன்று, காளப்பட்டி ரோடு, கெட்டிமேளம் மஹாலில், காலை, 10:00 மணிக்கு நடக்கிறது.
பாவேந்தர் விழா
உலகத் தமிழ் நெறிக்கழகம் சார்பில், பாவேந்தர் விழா, தேவாங்க மேல்நிலைப்பள்ளி அருகே, சன்மார்க்க சங்கத்தில் நடக்கிறது. காலை, 9:00 மணிக்கு நடக்கும் நிகழ்வில், மாநில அளவில் சிலம்பாட்டத்தில் முதல் இடம் பிடித்த கோவையை சேர்ந்த கன்சிகாவுக்கு பாராட்டு விழாவும் நடக்கிறது.
பசுமை வனம் களப்பணி
மதுக்கரை வனச்சரகத்திற்குட்பட்ட பிள்ளையார்புரத்தில் பசுமை வனத்தில், 337வது வார தொடர் களப்பணி நடக்கிறது. கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு நடத்தும் களப்பணியில் ஆர்வமுள்ளவர்கள் கலந்து கொள்ளலாம். காலை, 7:00 முதல் 9:30 மணி வரை களப்பணி நடக்கிறது.
கோவை புத்தகத் திருவிழா
உலக புத்தக தினத்தை முன்னிட்டு, மக்கள் வாசிப்பு இயக்கம் சார்பில், கோவை புத்தகத் திருவிழா கண்காட்சி நடக்கிறது. அவிநாசி ரோடு, நவஇந்தியா பேருந்து நிறுத்தம் அருகே, மீனாட்சி ஹாலில், காலை, 11:00 மணி முதல் இரவு, 9:00 மணி வரை கண்காட்சி நடைபெறும்.
ஓவியக் கண்காட்சி
கஸ்துாரி சீனிவாசன் அறநிலையம் சார்பில், 'ரிதமிக் பேலட் தொடர்' என்ற, ஓவியக் கண்காட்சி நடந்து வருகிறது. பல்வேறு ஓவியர்கள் தங்கள் ஓவியங்களை காட்சிப்படுத்தியுள்ளனர். காலை, 10:00 முதல் மாலை, 6:30 மணி வரை, கண்காட்சியை பொதுமக்கள் பார்வையிடலாம்.
அமைதியின் அனுபவம்
தியானம், அன்பு பகிர்தல், இயற்கை, நேர்மறை எண்ணம் ஆகியவற்றின் மூலம் மன அமைதியை அனுபவிக்கலாம். அண்ணாசாலை எதிரில், ஓசூர் ரோட்டில் அமைந்துள்ள, ஆருத்ரா ஹாலில், இலவச வீடியோ சத்சங்கம் நடக்கிறது. 'நம்முள் அமைதியின் அனுபவம் சாத்தியமே' என்ற தலைப்பில், காலை, 11:00 மணிக்கு, சத்சங்கம் நடக்கிறது.
குடிநோய் விழிப்புணர்வு முகாம்
ஆல்கஹாலிக் அனானிமஸ் சார்பில், குடிநோய் குறித்த விழிப்புணர்வு முகாம், சுண்டக்காமுத்துார், டி.எஸ்.நர்சரி பள்ளியில், காலை, 10:30 முதல் மதியம், 12:00 மணி வரை நடக்கிறது. குனியமுத்துார், டிவைன் மேரி சர்ச்சில், மாலை, 6:30 முதல், இரவு, 8:30 மணி வரை நடக்கிறது.
இயற்கை வாழ்வியல்
இயற்கை சார்ந்த ஆரோக்கியமான வாழ்வியல் முறைகளை அறிந்துகொள்ளும் வாய்ப்பு. கோவை இயற்கை நலச்சங்கம் சார்பில், இயற்கை வாழ்வியல் குறித்த விழிப்புணர்வுக் கூட்டம் நடக்கிறது. அவிநாசி ரோடு, அண்ணாசிலை எதிரில், ஸ்ரீ சாய் கபே, டி.கே.பி., சேம்பரில், காலை, 10:30 மணிக்கு நிகழ்வு நடக்கிறது.
இலவச மருத்துவ முகாம்
எஸ்.பி.சி., கோவை தெற்கு பேராயம் மற்றும் எஸ்.பி.சி., சுகாதாரத்துறை இணைந்து, இலவச மருத்துவ முகாமை நடத்துகின்றன. செட்டிபாளையம் ரோடு, அம்பேத்கர் நகர், சர்வஜன மகிழ்ச்சி ஐ.பி.ஏ., திருச்சபையில், காலை 10:00 முதல் மதியம், 1:00 மணி வரை, முகாம் நடக்கிறது.

