/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பீஹாரிலிருந்து குழந்தைகளை கடத்தி விற்பனை; மேலும் இருவர் கைது
/
பீஹாரிலிருந்து குழந்தைகளை கடத்தி விற்பனை; மேலும் இருவர் கைது
பீஹாரிலிருந்து குழந்தைகளை கடத்தி விற்பனை; மேலும் இருவர் கைது
பீஹாரிலிருந்து குழந்தைகளை கடத்தி விற்பனை; மேலும் இருவர் கைது
ADDED : ஜூன் 10, 2024 11:54 PM

சூலுார் : கோவை மாவட்டம், அப்பநாயக்கன்பட்டி பகுதியில் குழந்தைகளை விற்பனை செய்ததாக, சைல்டு லைன் என்ற குழந்தைகள் நல அமைப்புக்கு தகவல் கிடைத்தது.
இதுகுறித்து விசாரித்த அந்த அமைப்பினர், குழந்தைகள் விற்கப்பட்டதை உறுதி செய்தனர். இதையடுத்து, அவர்கள் சூலுார் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தனர்.
போலீஸ் விசாரணையில், அப்பநாயக்கன்பட்டியில் ஹோட்டல் நடத்தி வந்த பீஹாரை சேர்ந்த மகேஷ்குமார் - அஞ்சலி தம்பதி, குழந்தைகளை வாங்கி விற்றது தெரிந்தது.
கடந்த வாரம் இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்களால் கடத்தி விற்கப்பட்ட, 2 வயது ஆண் குழந்தை, 1 மாதமே ஆன பெண் குழந்தையை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
தொடர்ந்து தனிப்படை நடத்திய விசாரணையில், பெண் குழந்தையை பணம் கொடுத்து வாங்கிய திம்மநாயக்கன் பாளையத்தை சேர்ந்த விஜயனை கைது செய்தனர்.
தொடர் விசாரணையில், குழந்தைகளை பீஹாரில் இருந்து கடத்தி வந்தது, அஞ்சலியின் தாயான பூனம் தேவி, 53, சகோதரி மேகா குமாரி, 21, ஆகியோர் என்பதும் தெரிந்தது. இதையடுத்து, அவர்கள் இருவரையும் நேற்று முன்தினம் இரவு போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில், பீஹாரில் ஏழை பெண்ணிடம், 1, 500 ரூபாய்க்கு குழந்தையை வாங்கி, 2.50 லட்சம் ரூபாய்க்கு திம்மநாயக்கன் பாளையத்தை சேர்ந்த விஜயனுக்கு விற்றது தெரிந்தது.
இவ்வழக்கில இதுவரை, ஐந்து பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். மேலும் இவ்வழக்கில் தொடர்புடைய நபர்களை தேடி வருகின்றனர்.

