/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வெயிலில் தவிக்கும் பயணிகள்; தேவை நிழற்குடை
/
வெயிலில் தவிக்கும் பயணிகள்; தேவை நிழற்குடை
ADDED : மே 06, 2024 12:26 AM

வெயிலில் தவிக்கும் பயணிகள்
போத்தனுார், ரயில் திருமண மண்டபம் மற்றும் போத்தனுார் பகுதிகளில், எந்த பேருந்து நிறுத்தத்திலும், நிழற்குடை என்பதே இல்லை. வெயில் காலத்தில், பேருந்துக்கு காத்திருக்கும் பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். இப்பகுதியில், நிழற்குடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- பாலன், போத்தனுார்.
தாரால் குழியை மூடுங்க!
பாலக்காடு ரோடு, எட்டிமடை ரவுண்டானா அருகே, சூர்யா சூப்பர் மார்க்கெட் எதிர்புறம், சாலை வளைவில் தார் சாலை இடிந்து, பாதி சாலை வரை குழியாக இருந்தது. வளைவில் திரும்பும் வாகனஓட்டிகள் விபத்தில் சிக்கினர். புகாருக்கு பின், மண் கொண்டு குழி மூடப்பட்டது. இரண்டு வாரங்களில், மீண்டும் குழியாகிவிட்டது. நிரந்தர தீர்வாக, தார் கொண்டு மூட வேண்டும்.
- கார்த்திக், க.க.சாவடி.
நிரம்பி வழியும் சாக்கடை
செல்வபுரம், தில்லை நகர், சரோஜினி நகர், மூன்றாவது தெரு மற்றும் ஐ.யு.டி.பி., காலனியில், சாக்கடை கால்வாய் நிரம்பி வழியும் நிலையில் உள்ளது. குப்பை, மண் அடைத்து கழிவுநீர் அடைத்துள்ளது. இப்பகுதியில், சாக்கடை அடைப்பு தொடர்கதையாக நிகழ்ந்து வருகிறது.
- கோவிந்தன், தில்லை நகர்.
துரத்தும் நாய்கள்
தொண்டாமுத்துார், புத்துார் ரோடு, ராமசாமி நகரில், தெருநாய்கள் தொல்லை அதிகளவில் உள்ளது. சாலையில் நடந்து செல்வோர் மற்றும் பைக்கில் செல்வோரை, நாய்கள் துரத்தி அச்சுறுத்துகின்றன. குழந்தைகள், முதியவர்கள் சாலையில் நடந்து செல்லவே அஞ்சுகின்றனர்.
- ரவி, ராமசாமி நகர்.
வாய்க்காலில் குப்பை தேக்கம்
கோவை மாநகராட்சி, 38வது வார்டு, பொம்மணாம்பாளையம் பிரிவு அருகே, கால்வாயில் தொடர்ந்து குப்பை கொட்டப்படுகிறது. பிளாஸ்டிக் உள்ளிட்ட குப்பை நிரம்பி, தண்ணீர் பாதை தடைபட்டுள்ளது. மழைக் காலம் துவங்குவதற்கு முன்பாக குப்பையை அகற்ற வேண்டும்.
- சண்முகம், பொம்மணாம்பாளையம்.
கடும் துர்நாற்றம்
திருச்சி ரோடு, அரசு மருத்துவமனை எதிரே, பாதாள சாக்கடை நிரம்பி சாலையில் வழிந்தோடுகிறது. சாலை குழிகளில் நிரம்பியுள்ள சாக்கடைநீர் தேங்கி வாகனங்கள் செல்லும் போது, தெறிக்கிறது. அப்பகுதி முழுவதும் கடும் துர்நாற்றம் வீசுகிறது.
- ராமமூர்த்தி, உக்கடம்.
கிடப்பில் சாலை பணி
திருச்சி ரோடு, அல்வேர்னியா கான்வென்ட் பள்ளி பிரதான சாலை அருகே, 62வது வார்டு, கொங்கு நகரில், சீரமைப்பு பணிக்காக சாலை தோண்டப்பட்டது. கடந்த இரண்டு வாரங்களாகியும் பணிகள் முடிக்காமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. விரைந்து பணியை முடித்து, சாலையை சீரமைக்க வேண்டும்.
- ரங்கராஜ், திருச்சி ரோடு.
சாலை ஆக்கிரமிப்பு
ஒண்டிப்புதுார், படக்கே கவுண்டர் வீதி விரிவாக்கம் பகுதி, கருமாரி அம்மன் லே-அவுட் பின்புறம், பொதுச்சாலை ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. தனி நபர்கள் தகரம் போட்டு சாலையை மறைத்துள்ளனர். ஆக்கிரமிப்பை அகற்றி, பொதுமக்களுக்கு பாதை ஏற்படுத்தி தர வேண்டும்.
- ஜென்சி, ஒண்டிப்புதுார்.
போக்குவரத்து நெருக்கடி
பாலக்காடு ரோடு, மரப்பாலம் ரயில்வே சுரங்கப்பாதையில், தினமும் காலை மற்றும் இரவு நேரங்களில் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. மாணவர்கள் வேலைக்கு செல்வோர், பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது.
- ஹரிஷ், கோவைப்புதுார்.
வேகத்தடை வேண்டும்
துடியலுார் - சரவணம்பட்டி ரோட்டில், காலை, மாலை வேளையில், அசுர வேகத்தில் வாகனங்கள் செல்கின்றன. கல்லுாரி, பள்ளி அருகே இருந்த வேகத்தடைகள் சில மாதங்களுக்கு முன்பு அகற்றப்பட்டது. கடந்த 15 நாட்களில், மூன்று விபத்துகளில் மூன்று பேர் பலியாகினர். வேகத்தடை அமைக்க பலமுறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கையில்லை.
- ராஜா, வெள்ளிக்கிணறு.