/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
குடிநீர் கசிவுக்கு போர்க்கால தீர்வு கண்காணிப்பு அலுவலர் அறிவுரை
/
குடிநீர் கசிவுக்கு போர்க்கால தீர்வு கண்காணிப்பு அலுவலர் அறிவுரை
குடிநீர் கசிவுக்கு போர்க்கால தீர்வு கண்காணிப்பு அலுவலர் அறிவுரை
குடிநீர் கசிவுக்கு போர்க்கால தீர்வு கண்காணிப்பு அலுவலர் அறிவுரை
ADDED : மே 09, 2024 04:59 AM

கோவை, : கோடை காலத்தில் குடிநீர் வினியோகம் மற்றும் குடிநீர் தேவைகளை எதிர்கொள்ள எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக, கோவை கலெக்டர் அலுவலகத்தில், மாவட்ட கண்காணிப்பு அலுவலரான, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அரசு செயலர் ஜெயஸ்ரீ நேற்று ஆய்வு செய்தார். கலெக்டர் கிராந்திகுமார் தலைமை வகித்தார். கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) ஸ்வேதா, டி.ஆர்.ஓ., ஷர்மிளா முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில், மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஜெயஸ்ரீ பேசியதாவது:
கோடை காலத்தில் தட்டுப்பாடின்றி குடிநீர் மற்றும் இதர உபயோகங்களுக்கு தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போது தேவைப்படும் அளவை விட, கோடையில் தேவை இன்னும் அதிகரிக்கும் என்பதால், குடிநீர் தட்டுப்பாட்டை தவிர்க்க புதிய வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்.
குழாய்களில் ஏற்படும் கசிவுகள், மின் மோட்டார்களில் ஏற்படும் பழுதுகளை போர்க்கால அடிப்படையில் சரிப்படுத்த வேண்டும். அனைத்து அலுவலர்களும் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும்.
நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சி பகுதிகளில் தேவையான குடிநீர் தங்கு தடையின்றி கிடைப்பதை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும். சாமியானா பந்தல் அமைத்து, நீர் மோர் வழங்குவதை போல், மாநகராட்சிக்கு உட்பட்ட ஐந்து மண்டலங்களிலும் பறவைகள், விலங்குகளுக்கு குடிநீர் வசதி செய்ய வேண்டும்.
தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் 10 இடங்களில் நடக்கும் அடுக்குமாடி குடியிருப்பு கட்டுமான பணியை விரைந்து முடிக்க வேண்டும்.
இவ்வாறு, அவர் அறிவுறுத்தினார்.
முன்னதாக, கொடிசியா அருகில், 2 ஏக்கரில் சிறுவர் சீர்திருத்தப்பள்ளி அமைப்பதற்கான இடம் தேர்வு, உக்கடம் - ஆத்துப்பாலம் மேம்பாலம், மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட பகுதிகளில் பாதாள சாக்கடை பணி, ரத்தினபுரியில் அங்கன்வாடி மையம் கட்டுமானம் ஆகியவற்றை, கண்காணிப்பு அலுவலர் நேரில் ஆய்வு செய்து அறிவுரை வழங்கினார். அப்போது, மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் உடனிருந்தார்.