ADDED : ஜூலை 03, 2026 04:52 PM
வால்பாறை: சோலையாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ள நிலையில், மின் உற்பத்திக்காக பரம்பிக்குளம் அணைக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
வால்பாறையில் கடந்த மாதம், 4ம் தேதி முதல் தென்மேற்கு பருவமழை பெய்கிறது. இதனால் அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இருந்து நீர்வரத்து அதிகரித்துள்ளதோடு, சோலையாறு அணையின் நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது.
இந்நிலையில், மானாம்பள்ளி மின் உற்பத்தி நிலையத்தில் கடந்த இரண்டு நாட்களாக, நாள் தோறும், 42 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. இதற்காக சோலையாறு அணையிலிருந்து வினாடிக்கு, 928 கனஅடி தண்ணீர் வீதம் மானாம்பள்ளி பவர்ஹவுஸ் வாயிலாக பரம்பிக்குளம் அணைக்கு திறந்து விடப்படுகிறது.
வால்பாறையில் பெய்யும் பருவமழையால், 160 அடி உயரமுள்ள சோலையாறு அணையின் நீர்மட்டம் நேற்று காலை, 76.77 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு, 829 கனஅடி தண்ணீர் வரத்தாக உள்ளது. அதிகபட்சமாக மேல்நீராறு அணையில், 57 மி.மீ., மழையளவு பதிவானது.
