/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அடுத்த மேயர் யார்? கோவை மாநகராட்சியில் 'எகிறுகிறது' எதிர்பார்ப்பு
/
அடுத்த மேயர் யார்? கோவை மாநகராட்சியில் 'எகிறுகிறது' எதிர்பார்ப்பு
அடுத்த மேயர் யார்? கோவை மாநகராட்சியில் 'எகிறுகிறது' எதிர்பார்ப்பு
அடுத்த மேயர் யார்? கோவை மாநகராட்சியில் 'எகிறுகிறது' எதிர்பார்ப்பு
ADDED : ஜூலை 04, 2024 05:40 AM

கோவை : கோவை மேயராக இருந்த கல்பனா, ராஜினாமா செய்ததை தொடர்ந்து, அடுத்த மேயர் யார் என்கிற எதிர்பார்ப்பு, கட்சியினர் மற்றும் கவுன்சிலர்கள் மத்தியில் எழுந்திருக்கிறது.
தமிழகத்தில், 2022 பிப்., 18ல் உள்ளாட்சி தேர்தல் நடந்தது. கோவை மாநகராட்சியில் மொத்தமுள்ள, 100 வார்டுகளில், தி.மு.க., - 73, காங்., - 9, மா.கம்யூ., - 4, இ.கம்யூ., - 4, ம.தி.மு.க., - 3, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி - 2, த.மு.மு.க., - 1 என, தி.மு.க., கூட்டணியினர், 96 வார்டுகளில் வெற்றி பெற்றன. அ.தி.மு.க., - 3 மற்றும் ஒரு எஸ்.டி.பி.ஐ., வேட்பாளர் வெற்றி பெற்றனர்.
மேயர் பதவி
தி.மு.க., கவுன்சிலர்களில், 73 பேரில், 55 பேர் பெண்கள். மேயர் பதவி இட ஒதுக்கீட்டில் பெண்களுக்கு வழங்கப்பட்டதால், அப்பதவியை கைப்பற்ற போட்டி ஏற்பட்டது. மண்டல தலைவர்கள் மீனா, லக்குமி இளஞ்செல்வி, கவுன்சிலர் நிவேதா மற்றும் சிலரது பெயர்கள் முன்மொழியப்பட்டன.
யாரும் எதிர்பார்க்காத வகையில், முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி பரிந்துரையில், 19வது வார்டு கவுன்சிலர் கல்பனா, மேயராக தேர்வு செய்யப்பட்டார். அவர், சென்னைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, முதல்வர் ஸ்டாலினிடம் அறிமுகம் செய்து வைக்கப்பட்டார். இரு ஆண்டுகள், மூன்று மாதங்கள், 30 நாட்கள் பதவி வகித்த அவர், தனது உடல் நிலையை காரணம் காட்டி, நேற்று ராஜினாமா கடிதம் கொடுத்திருக்கிறார்.
சரி, அடுத்தது யார்?
அடுத்த மேயர் யார் என்கிற எதிர்பார்ப்பு, தி.மு.க., கவுன்சிலர்கள் மற்றும் ஆளுங்கட்சியினர் மத்தியில் எழுந்திருக்கிறது. அப்பதவியை கைப்பற்றுவதற்கு பலரும் முயற்சிக்கின்றனர். மத்திய மண்டல தலைவர் மீனா, இளைஞரணி அமைப்பாளர் தனபால் மனைவி அம்பிகா, 21வது வார்டு கவுன்சிலர் பூங்கொடி, 29வது வார்டு ரங்கநாயகி, மாநகராட்சி பணிகள் குழு தலைவர் சாந்தி ஆகியோரது பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டு உள்ளன.
இவர்களில் சிலர் சமீபத்தில் அறிவாலயம் சென்று திரும்பியுள்ளனர். அதனால், இவர்களில் ஒருவர் மேயராக தேர்ந்தெடுக்கப்படலாம் என்கிற பேச்சு, ஆளுங்கட்சியினர் மத்தியில் எழுந்திருக்கிறது.
பரிந்துரைக்கப்படும் பெயர்கள், அவர்கள் சார்ந்த சமுதாயம், கட்சிக்கு ஆற்றிய பணி, செயல்பாடு உள்ளிட்ட விபரங்களுடன் கூடிய அறிக்கை, முதல்வர் ஸ்டாலினிடம் ஒப்படைக்கப்பட்டு இருக்கிறது. புதிய மேயர் யார் என்கிற விபரம் விரைவில் அறிவிக்கப்படும் என கட்சியினர் தெரிவித்தனர்.
திறமையானவர் தேவை
கோவையில் கவுண்டர் மற்றும் நாயுடு சமுதாயத்தினர், பெரும்பான்மையாக இருக்கின்றனர். அதனால், இச்சமுதாயத்தை சேர்ந்தவர்களுக்கே, முக்கிய பதவிகள் வழங்கப்படுவதாக ஒரு குற்றச்சாட்டு பரவலாக இருக்கிறது.
அதனால், மாற்று சமுதாயத்தை சேர்ந்த கவுன்சிலர்களில் இருந்து ஒருவரை, மேயராக தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற கோரிக்கை, ஆளுங்கட்சியினர் மத்தியில் இருந்து அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது.
அடுத்த மேயர் யார் என்கிற துருப்புச்சீட்டு, முதல்வர் ஸ்டாலின் கரங்களில் இருக்கிறது. கோவை நகரின் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுக்க, திறமையானவரின் கைகளில் அந்த வணக்கத்துக்குரிய பதவியை ஒப்படைக்க வேண்டும் என்பதே, அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
கோவை மற்றும் திருநெல்வேலி மேயர்கள் நேற்று, தங்களுடைய பதவியை ராஜினாமா செய்துள்ளனர்; இதனால், இந்த மாநகராட்சிகளில் விரைவில் புதிய மேயர்கள் பதவியேற்கவுள்ளனர்.
இதுகுறித்து, நமது நாளிதழில், கடந்த ஜூன் 16 அன்றே, 'பல மாநகராட்சிகளில் விரைவில் மேயர்கள் மாற்றம்' என்ற தலைப்பில், விரிவான செய்தி வெளியிடப்பட்டது.
அதில், கோவை மேயர் மீது, ஆளும்கட்சி கவுன்சிலர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளுக்கு ஏற்பட்ட அதிருப்தி மற்றும் அவர்கள் தெரிவித்த புகார்கள் குறித்து விளக்கப்பட்டிருந்தது.
கோவையில் மட்டுமின்றி, வேறு சில மாநகராட்சிகளிலும் மேயர்கள் மாற்றப்படுவார்கள் என்ற எதிர்பார்ப்பு, தி.மு.க., நிர்வாகிகளிடம் எழுந்துள்ளது பற்றியும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
தேர்தலுக்கு முன், இவர்களை மாற்றினால் அதுவே பெரும் சர்ச்சையாகும் என்பதால், தேர்தல் முடிவதற்காக தி.மு.க., தலைமை காத்திருந்தது பற்றியும் அதில் குறிப்பிட்டு, விரைவில் பலரும் மாற்றப்படுவார்கள் என்று உறுதியாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. அன்று 'தினமலர்' சொன்னது போலவே, இப்போது நடந்துள்ளது.