ADDED : ஜூலை 19, 2026 08:01 PM
பெ.நா.பாளையம்: பயிர்களுக்கு நடுவே வைக்கப்படும் காட்டு பொம்மை வெறும் காட்சி பொருள் அல்ல. அவற்றை சரியான முறையில் பயன்படுத்தினால், அவை பயிர் பாதுகாப்பு கருவியாக செயல்படும் என, முன்னோடி விவசாயிகள் அறிவுரை கூறியுள்ளனர்.
விதைப்பு காலம் துவங்கியதும், தோட்டத்தில் காட்டு பொம்மை அமைப்பது வழக்கம். புதிதாக விதைக்கப்பட்ட விதைகள், முளைத்த இளம் நாற்றுகள் ஆகியவற்றை குருவி, புறா, மயில் போன்ற பறவைகளிடமிருந்து பாதுகாக்க காட்டு பொம்மை உறுதுணையாக விளங்குகிறது. ஆனால், அவற்றை ஒரே இடத்தில், பல நாட்கள் வைத்திருந்தால் பறவைகள் அது உயிரற்ற பொருள் என்பதை விரைவிலேயே உணர்ந்து, அதைப் பார்த்து பயப்படுவதை நிறுத்தி விடும். எனவே, காட்டு பொம்மையை, 2 அல்லது, 3 நாட்களுக்கு ஒரு முறை அதன் இடத்தை மாற்றி அமைக்க வேண்டும். அதன் கைகளில் பழைய சட்டை, வண்ணத்துணி, காற்றில் சுழலும் ரிப்பன், பழைய சி.டி., அல்லது பிரதிபலிக்கும் பொருட்களை கட்டினால், அதன் செயல் திறன் அதிகரிக்கும்.
பறவைகள் அனைத்தும் நம் எதிரிகள் அல்ல. பல பறவைகள் வயலில் உள்ள வெட்டுக்கிளி, புழு, கம்பளி பூச்சி உள்ளிட்ட தீங்கு விளைவிக்கும் பூச்சிகளை உண்டு இயற்கையான பூச்சி கட்டுப்பாட்டை உருவாக்குகின்றன.
அவற்றை முழுமையாக விரட்டுவது இயற்கையின் சமநிலையை பாதிக்கும். காட்டு பொம்மை என்பது வெறும் பொம்மை அல்ல. சரியான நேரத்தில், சரியான முறையில் பயன்படுத்தினால் அது விவசாயின் சிறந்த காவலாளி என்பதை உணரலாம் என, முன்னோடி விவசாயிகள் கூறினர்.
