/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மழைநீர் வடிகால் அடைப்பால் துர்நாற்றம்: நடவடிக்கை எடுக்குமா நகராட்சி
/
மழைநீர் வடிகால் அடைப்பால் துர்நாற்றம்: நடவடிக்கை எடுக்குமா நகராட்சி
மழைநீர் வடிகால் அடைப்பால் துர்நாற்றம்: நடவடிக்கை எடுக்குமா நகராட்சி
மழைநீர் வடிகால் அடைப்பால் துர்நாற்றம்: நடவடிக்கை எடுக்குமா நகராட்சி
ADDED : ஏப் 16, 2024 11:06 PM

பொள்ளாச்சி;பொள்ளாச்சி நகரில், பெரும்பாலான தெருக்களில் மழைநீர் வடிகால், பிளாஸ்டிக் கழிவால் அடைபட்டு காணப்படுகின்றன.
பொள்ளாச்சி நகராட்சியில், குறைந்த எண்ணிக்கையிலான துாய்மைப் பணியாளர்களைக் கொண்டே, சுகாதார பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. வீடுகளில் குப்பை பெறுவது ஒரு பிரிவாகவும், ரோட்டில் தேங்கும் குப்பை, சாக்கடையில் இருந்து எடுக்கும் கழிவுகளை அகற்றுவது மற்றொரு பிரிவாக நிர்வகிக்கப்படுகிறது.
கடைகளில், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் மற்றும் பாலித்தீன் பொருட்கள் பயன்பாடு அதிகரித்துள்ளது. மளிகை, ஓட்டல் என, எந்தவொரு கடையிலும் பொருட்களை வாங்கிச் செல்ல பாலித்தீன் பைகள் பயன்படுத்தப்படுகின்றன. இவைகள், முறையாக துாய்மைப் பணியாளர்களிடம் ஒப்படைக்காமலும், அப்புறப்படுத்தாலும் திறந்தவெளியில் வீசி எறியப்படுகிறது.
குறிப்பாக, மழைநீர் வடிகாலில் குப்பை கொட்டுவதை பலர் வாடிக்கையாகக் கொண்டுள்ளனர். இது ஒருபுறமிருக்க, பாதாள சாக்கடை இணைப்பு பெறாத குடியிருப்பு வீடுகள் மற்றும் தொழில் நிறுவனங்களில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர், மழைநீர் வடிகாலை அடைகிறது.
நகரின் பல இடங்களில் உள்ள மழைநீர் கால்வாய், பிளாஸ்டிக் மற்றும் கழிவுநீர் தேக்கத்தால், துார்நாற்றத்தை கிளப்புகிறது. கொசு உற்பத்தியாகி நோய் பாதிப்பும் ஏற்படுகிறது. அவ்வகையில், வெங்கட்ரமணன் வீதி, தனியார் மஹால் அருகே உள்ள மழைநீர் வடிகாலில், பாலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் பாட்டில்கள் தேக்கமடைந்து காணப்படுகிறது.
கடைக்காரர்கள் கூறியதாவது:
சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் பிளாஸ்டிக் பயன்பாட்டை ஒழிக்க, நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். ரோடு புதுப்பிப்பு பணியின் போது, மழைநீர் வடிகால் மேல் அமைக்கப்பட்டிருந்த 'சிலாப்' அகற்றப்பட்டன.
பணிகள் முடிந்தும், வடிகாலின் மீது சிலாப் அமைக்கப்படாமல் உள்ளது. தவிர, வடிகாலின் இடையே ரோட்டை கடந்து செல்லும் வகையில் புதைவடமாக தொலைத்தொடர்பு கேபிள் அமைக்கப்பட்டுள்ளது.
இதனால், அடிக்கடி அடைப்பு ஏற்பட்டு துர்நாற்றம் வீசுகிறது. நகராட்சி நிர்வாகத்தினரை முறையிட்டாலும் அவ்வபோது சுத்தம் செய்யப்படுகிறதே தவிர முழுமையான தீர்வு காணப்படாமல் உள்ளது.
இவ்வாறு, கூறினர்.

