/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
புதிய ஆயக்கட்டு கால்வாய்கள் துார்வாரும் பணி துவங்கியாச்சு: தண்ணீர் திறக்க ஆழியாறு விவசாயிகள் எதிர்பார்ப்பு
/
புதிய ஆயக்கட்டு கால்வாய்கள் துார்வாரும் பணி துவங்கியாச்சு: தண்ணீர் திறக்க ஆழியாறு விவசாயிகள் எதிர்பார்ப்பு
புதிய ஆயக்கட்டு கால்வாய்கள் துார்வாரும் பணி துவங்கியாச்சு: தண்ணீர் திறக்க ஆழியாறு விவசாயிகள் எதிர்பார்ப்பு
புதிய ஆயக்கட்டு கால்வாய்கள் துார்வாரும் பணி துவங்கியாச்சு: தண்ணீர் திறக்க ஆழியாறு விவசாயிகள் எதிர்பார்ப்பு
UPDATED : டிச 11, 2025 06:47 AM
ADDED : டிச 11, 2025 05:09 AM

பொள்ளாச்சி: ஆழியாறு புதிய ஆயக்கட்டு பாசனத்துக்கு தண்ணீர் திறப்பதற்கு முன்பு, கால்வாய்களை துார்வாருதல் உள்ளிட்ட ஆயத்தப்பணிகள் துவங்கப்பட்டுள்ளன. இதையடுத்து, விரைவில் தண்ணீர் திறக்கப்படும் என விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்.
ஆழியாறு பாசனப்பகுதிகளில், பொள்ளாச்சி கால்வாய், வேட்டைக்காரன்புதுார் கால்வாய், சேத்துமடை கால்வாய், ஆழியாறு பீடர் கால்வாய் ஆகிய பாசனப்பகுதிகளில், மொத்தம் 44 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
பாசனத்துக்கு கிடைக்கும் தண்ணீரை நம்பி, வேளாண்துறையின் பரிந்துரையின்படி, விவசாயிகள் தென்னை சாகுபடி செய்ய துவங்கினர்.
ஆழியாறு முதன்மை ஊட்டுக்கால்வாய், 13.40 கி.மீ., கிளை கால்வாய், 62.90 கி.மீ., துாரம் உடையதாகும்.
சேத்துமடை முதன்மை கால்வாய், 8.40 கி.மீ.,; கிளை கால்வாய், 25.89 கி.மீ.,; வேட்டைக்காரன்புதுார் முதன்மை கால்வாய், 17.40 கி.மீ., கிளை கால்வாய், 45.00 கி.மீ., பொள்ளாச்சி முதன்மை கால்வாய், 48.00 கி.மீ., கிளை கால்வாய், 112 கி.மீ., துாரம் கொண்டதாக உள்ளது.
ஒவ்வொரு பிரதான கால்வாய் வழியாக தண்ணீர் திறக்கப்பட்டு, கிளைக்கால்வாய் வழியாக பாசனத்துக்கு தண்ணீர் வினியோகிக்கப்படுகிறது.
ஆண்டுதோறும் பாசனத்துக்கு, 'அ' மண்டலம், 'ஆ' மண்டலம் என பிரிக்கப்பட்டு கால்வாய் வழியாக நீர் வினியோகிக்கப்படுகிறது. இந்நிலையில், இந்தாண்டு பருவமழை கை கொடுத்ததால், கடந்த சில மாதங்களாக அணை முழு கொள்ளளவில் காட்சியளிக்கிறது.
பருவமழை கை கொடுத்ததால், பாசனத்துக்கு நீர் திறக்கப்படாமல் இருந்தது. மேலும், கால்வாய்கள் துார்வாரப்படாமல் புதர் மண்டி காணப்பட்டதால், தண்ணீர் திறப்பு காலதாமதமாகியது.
தமிழக முதல்வர் ஸ்டாலின், உடுமலை வந்த போது, 10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பி.ஏ.பி. கால்வாய்கள் துார்வாரப்படும் என அறிவித்தார்.
அறிவிப்பு வெளியாகியும் பணம் ஒதுக்கீடு செய்யாததால், துார்வாரும் பணிகள் உடனடியாக துவங்கப்படவில்லை.
விவசாயிகள் நிதியை ஒதுக்கீடு செய்ய பலமுறை அமைச்சர், அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில், தமிழக முதல்வர் அறிவித்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதையடுத்து, தற்போது கால்வாய்கள் துார்வாரும் பணிகள் துவங்கப்பட்டுள்ளன.
அதிகாரிகளுடன் ஆலோசனை ஆழியாறு நீர் தேக்க திட்டக்குழு தலைவர் செந்தில் கூறியதாவது:
ஆழியாறு புதிய ஆயக்கட்டு பாசனத்துக்கு ஆண்டுதோறும் அக். மாதம் தண்ணீர் திறக்கப்படும். நடப்பாண்டு தொடர் மழை காரணமாகவும், முதல்வர் அறிவித்த நிதி ஒதுக்கீடு செய்வதில் தாமதம் ஏற்பட்டதால் கால்வாய் துார்வாரப்படாமல் இருந்ததால் தண்ணீர் திறப்பு காலதாமதமாகியது.
தற்போது முதல்வர் அறிவித்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதையடுத்து, கால்வாய்கள் துார்வாரும் பணிகள் நடைபெற்று வருகின்றன. முழுமையாக கால்வாய்கள் துார்வார வலியுறுத்தியுள்ளோம்.
தொடர்ந்து, அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டு அரசுக்கு கருத்துரு அனுப்பி, தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.

