/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
உங்கள் எதிர்காலத்தை நீங்கள்தான் முடிவு செய்ய வேண்டும்: தினமலர் நாளிதழ் நடத்திய 'வாகை சூடு' நிகழ்ச்சியில் பேச்சு
/
உங்கள் எதிர்காலத்தை நீங்கள்தான் முடிவு செய்ய வேண்டும்: தினமலர் நாளிதழ் நடத்திய 'வாகை சூடு' நிகழ்ச்சியில் பேச்சு
உங்கள் எதிர்காலத்தை நீங்கள்தான் முடிவு செய்ய வேண்டும்: தினமலர் நாளிதழ் நடத்திய 'வாகை சூடு' நிகழ்ச்சியில் பேச்சு
உங்கள் எதிர்காலத்தை நீங்கள்தான் முடிவு செய்ய வேண்டும்: தினமலர் நாளிதழ் நடத்திய 'வாகை சூடு' நிகழ்ச்சியில் பேச்சு
ADDED : மார் 04, 2025 06:29 AM

கோவை; 'தினமலர்' நாளிதழ், அவினாசிலிங்கம் பல்கலை, கோவை மெடிக்கல் சென்டர் மருத்துவமனை (கே.எம்.சி.எச்.,) சார்பில், 'வாகை சூடு' எனும் கருத்தரங்கு, அவினாசிலிங்கம் பல்கலையில் நேற்று நடந்தது.
காலை 10:30 மணிக்கு துவங்கிய நிகழ்ச்சியை சிறப்பு விருந்தினர்கள் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தனர். பல்வேறு துறைகளில் சாதிக்க துடிக்கும் பெண்களுக்கான நிகழ்ச்சியாக, 'வாகை சூடு' நடத்தப்பட்டது. இதில், தினமலர் கோவை பதிப்பு செய்தி ஆசிரியர் விஜயகுமார், மற்றும் நிபுணர்கள் பேசினர்.
அவினாசிலிங்கம் பல்கலை பதிவாளர்(பொறுப்பு) இந்து தலைமை வகித்து பேசியதாவது:
பெண்கள் ஆளுமையோடு வளர வேண்டும் என, பல ஆண்டுகளாக பேசப்படுகிறது. உங்களால் அனைத்து விஷயங்களையும் செய்ய முடியும் எனில், அதுதான் ஆளுமை. ஆளுமை தன்மை உள்ளவர்கள், எதையும் மாற்றலாம்.
நீங்கள் செல்லும் பாதையில், பல்வேறு தடைகள் வரும்; அதை எதிர்கொண்டு வெற்றி பெற வேண்டும். என்ன படிக்கிறீர்கள் என்பது முக்கியமல்ல. அதில் புதிதாக என்ன கண்டுபிடிக்கிறீர்கள் என்பது முக்கியம்.
ஒவ்வொருவருக்கும் இலக்கு இருக்க வேண்டும். அதை அடைய தொடர்ந்து உழைக்க வேண்டும். வெற்றி பெற்றவர்களின் ரகசியத்தை பின்பற்ற வேண்டும். உங்களை சுற்றி இருப்பவர்களையும், முன்னேற்ற பாதையில் அழைத்து செல்ல வேண்டும். உங்கள் எதிர்காலத்தை நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.
இவ்வாறு, அவர் பேசினார்.
முன்னதாக, பல்கலை பெண்கள் கல்வி மைய இயக்குனர் பிரமேலா பிரியதர்ஷிணி வரவேற்றார். தினமலர் விற்பனை பிரிவு முதன்மை மேலாளர் ஐயப்பன் மற்றும் பலர் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில், கே.எம்.சி.எச்., சார்பில், பெண்களுக்கான சிறப்பு மருத்துவ சிகிச்சைக்கான திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
'முக்கியமானது முழு உடல் பரிசோதனை'
கே.எம்.சி.எச்., முதன்மை செயல் அலுவலர் சிவகுமாரன் பேசியதாவது:
உலகில் இரு இடங்கள் மட்டுமே புனிதமானவை. ஒன்று தாயின் கருவறை. மற்றொன்று ஆசிரியரின் வகுப்பறை. மழலையர் பள்ளியில் துவங்கி, 15 ஆண்டுகளுக்கும் மேலாக உங்களை முதிர்ந்த இளைஞராக உருவாக்க, பாடுபட்ட இடம் தான் வகுப்பறை.
இந்தியாவில், இரண்டு லட்சம் பேர், சிறுநீரகங்களுக்காக காத்திருக்கின்றனர். ஆனால், 11 ஆயிரத்து, 500 சிறுநீரகங்கள் மட்டுமே கிடைக்கிறது. இதைக்கருத்தில் கொண்டு, ஒவ்வொருவரும் தங்களது உடல் உறுப்புகளை, தானம் செய்ய வேண்டும். நம் உடலை பராமரிக்க வேண்டும். முழு உடல் பரிசோதனையை, 50 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை, 50 - 60 வயதுக்குட்பட்டவர்கள், இரண்டு ஆண்டுக்கு ஒரு முறை, 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், ஆண்டுக்கு ஒரு முறையும் மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு, அவர் பேசினார்.