/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
திடீரென நிறுத்தியதால் வேலை இன்றி தவிக்கிறோம் 100 நாள் திட்ட தொழிலாளர்கள் புகார்
/
திடீரென நிறுத்தியதால் வேலை இன்றி தவிக்கிறோம் 100 நாள் திட்ட தொழிலாளர்கள் புகார்
திடீரென நிறுத்தியதால் வேலை இன்றி தவிக்கிறோம் 100 நாள் திட்ட தொழிலாளர்கள் புகார்
திடீரென நிறுத்தியதால் வேலை இன்றி தவிக்கிறோம் 100 நாள் திட்ட தொழிலாளர்கள் புகார்
ADDED : மார் 18, 2024 09:14 PM

அன்னுார்:'100 நாள் வேலை திட்டத்தை, திடீரென நிறுத்திவிட்டதால் வேலையில்லாமல் தவிக்கிறோம்,' என கிராம சபையில் புகார் தெரிவித்தனர்.
அன்னுார் வட்டாரத்தில், நான்கு ஊராட்சிகளில், கடந்த 11ம் தேதி முதல் 14ம் தேதி வரை 100 நாள் வேலை திட்டத்தில் செய்யப்பட்ட பணிகள் வெளி தணிக்கையாளர்கள் வாயிலாக ஆய்வு செய்யப்பட்டது. தணிக்கை அறிக்கை தயாரிக்கப்பட்டது. தணிக்கை அறிக்கை சமர்ப்பிக்கும் சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்தது. வடக்கலுார் ஊராட்சியில், மூக்கனுார் சமுதாய நலக்கூடத்தில் நடந்த கூட்டத்திற்கு மயில்சாமி தலைமை வகித்தார். ஊராட்சி தலைவர் ராஜ்குமார் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில், 'கடந்த நிதியாண்டில், ஒரு கோடியே 32 லட்சத்து 82 ஆயிரத்து 185 ரூபாயில், 223 பணிகள் செய்யப்பட்டன. இதில் தணிக்கை குழு தெரிவித்த ஆட்சேபனைகள் நிவர்த்தி செய்யப்படும்,' என திட்ட ஒருங்கிணைப்பாளர் ஆறுமுகம் தெரிவித்தார்.
'ஊராட்சியில் கடந்த நிதியாண்டில் 455 குடும்பங்கள் 100 நாள் வேலை திட்டத்தில் பயன் பெற்றுள்ளன. 38 ஆயிரத்து 906 மனித நாட்கள் இத்திட்டத்தில் செலவு செய்யப்பட்டுள்ளன,' என கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
நுாறு நாள் திட்ட தொழிலாளர்கள் பேசுகையில், 'எங்களுக்கு இந்த ஆண்டில் இன்னும் சில நாட்கள் பாக்கி இருக்கும்போது திடீரென கடந்த வாரமே வேலையில்லை என்று கூறி நிறுத்தி விட்டனர். தற்போது மழை இல்லாததால் தனியார் தோட்டங்களிலும் எங்களை வேலைக்கு அழைப்பதில்லை.
ஏற்கனவே 13 வார சம்பளம் நிலுவை இருந்தது. தற்போது ஐந்து வார சம்பளம் மட்டுமே வந்துள்ளது. எட்டு வார சம்பளம் இன்னும் வழங்க வேண்டும். 100 நாள் என்பதை 150 நாளாக உயர்த்த வேண்டும்,' என்றனர்.
அதிகாரிகள் பதிலளிக்கையில், 'ஏப்ரல் மாதம் மீண்டும் அனைவருக்கும் வேலை வழங்கப்படும்,' என்றனர்.
பசூர் ஊராட்சி சிறப்பு கிராம சபை கூட்டம் கம்மாள தொட்டி பாளையத்தில் நடந்தது. ஊராட்சி தலைவர் வித்யா சுகுமார் முன்னிலை வகித்தார். திட்ட ஒருங்கிணைப்பாளர் சமூக தணிக்கை அறிக்கை ஆட்சேபனைகள் குறித்து பதில் அளித்தார். ஊராட்சியில் 72 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 37 பணிகள் செய்து முடிக்கப்பட்டுள்ளன,' என தெரிவிக்கப்பட்டது.
துணை வட்டார வளர்ச்சி அலுவலர் யமுனா ராணி, ஊராட்சி செயலர் ராஜேஷ் குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

