/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சிறுதானியத்தில் 150 வகை பொங்கல்!
/
சிறுதானியத்தில் 150 வகை பொங்கல்!
ADDED : ஜன 13, 2024 01:50 AM
கோவை:இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரி உணவு மற்றும் ஹோட்டல் மேலாண்மைத்துறை மாணவர்கள் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, உலக சாதனை நிகழ்வாக நேற்று சிறுதானிய சிறப்பு பொங்கல் விழா கொண்டாடினர்.
இதில் இந்த கல்லுாரியின் கேட்டரிங் துறையை சேர்ந்த 75 மாணவர்கள், 75 நிமிடங்களில் சிறுதானியங்களை கொண்டு 75 வகையான இனிபபு பொங்கல், 75 வகையான இனிப்பு இல்லாத பொங்கல் என, 150 பொங்கல் வகைகளை சமைத்து, சாதனை படைத்துள்ளனர்.
இதில் கதம்ப சாமைப் பொங்கல், அக்கரவடிசல் பொங்கல், தேங்காய்ப்பால் கருப்பட்டி பொங்கல், உக்கரை குதிரைவாலி பொங்கல், வல்லாரை சோலை பொங்கல், எலுமிச்சை புல் பொங்கல், கற்பூரவல்லி பொங்கல், கொய்யா வரகு பொங்கல், வெற்றிலை கம்பு பொங்கல், நெய் பனிவரகு பொங்கல், பருத்திப்பால் திணைப் பொங்கல் உள்ளிட்ட 150 வகையான பொங்கல்கள் சமைக்கப்பட்டன.
இந்த சாதனை நிகழ்வில்ஒருங்கணைத்த ஷெப் செபாஸ்டியன் ஷால்வின் கூறியதாவது:
இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் பரிந்துரையால், 2023 ஆண்டை ஐ.நா.,சபை சிறுதானிய ஆண்டாக அறிவித்தது. இதனால் இந்தியாவின் பாரம்பரிய உணவு தானியங்களான சிறுதானியங்கள் உலக மக்களின் கவனத்தை பெற்றது.
இந்திய மக்கள் சிறுதானியங்களின் நன்மையை அறித்து, இப்போது சிறுதானிய உணவுகளை விரும்பி உண்ண துவங்கி உள்ளனர்.
சிறுதானியங்கள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக இந்த சிறுதானிய சாதனை பொங்கல் நிகழ்வை எங்கள் கல்லுாரி மாணவர்கள் நடத்தி சாதனை செய்துள்ளனர்.
இவ்வாறு, அவர் கூறினார்.
கல்லுாரி முதல்வர் பொன்னுசாமி, உணவு மற்றும் ஹோட்டல் மேலாண்மைத் துறைத் தலைவர் பிரேம் கண்ணா உள்ளிட்டோர் பங்கேற்று, மாணவர்களை ஊக்கப்படுத்தினர்.