/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஹெக்டேருக்கு 20 டன் இஞ்சி அறுவடை செய்யலாம்! பயன்பெற தோட்டக்கலைத்துறை அழைப்பு
/
ஹெக்டேருக்கு 20 டன் இஞ்சி அறுவடை செய்யலாம்! பயன்பெற தோட்டக்கலைத்துறை அழைப்பு
ஹெக்டேருக்கு 20 டன் இஞ்சி அறுவடை செய்யலாம்! பயன்பெற தோட்டக்கலைத்துறை அழைப்பு
ஹெக்டேருக்கு 20 டன் இஞ்சி அறுவடை செய்யலாம்! பயன்பெற தோட்டக்கலைத்துறை அழைப்பு
ADDED : ஜன 18, 2024 12:22 AM

ஆனைமலை: 'ஆனைமலை பகுதியில், 8 ெஹக்டேரில் இஞ்சி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. சாகுபடி செய்ய விரும்புவோர் தோட்டக்கலைத்துறையை அணுகலாம்,' என தோட்டக் கலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
வெப்ப, மித வெப்ப மண்டல பகுதியான இந்தியாவில், இஞ்சி அதிகளவு பயிரிடப்படுகிறது. உலக உற்பத்தியில், 30 - 40 சதவீதம் கேரளா, அருணாச்சலபிரதேசம், ஒடிசா, மேகலாயா மற்றும் மேற்கு வங்க மாநிலங்களில் உற்பத்தியாகிறது.
தமிழகம், கர்நாடகா மற்றும் ஆந்திரா மாநிலங்களில் தட்ப வெப்பநிலை சரியாக உள்ள இடங்களில் பயிரிடப்படுகிறது. தமிழகத்தில் கன்னியாகுமரி மற்றும் பழனியிலும் சாகுபடி உள்ளது. தற்போது, ஆனைமலை பகுதியில் இஞ்சி, 8 ெஹக்டேர் பரப்பளவில் பயிரிடப்பட்டுள்ளது.
வடிகால் வசதியுள்ள வண்டல் கலந்த களிமண் நிலங்களில், கார அமிலத்தன்மை, 6.0 - 6.5 வரை உள்ள மண்ணில், சுப்பிரபா, சுருச்சி, சுரவி, ஹிமகிரி, ஐ.எஸ்.ஆர்., வரதா, மகிமா மற்றும் ரெஜிதா போன்ற ரகங்களை தேர்வு செய்து நடலாம்.
20 - 25 கிராம் எடையுள்ள இரண்டு முளைக்கக்கூடிய கணுக்களையும் கொண்ட விதை கிழங்குகள் பயன்படுத்தலாம்.
தேர்வு செய்யப்பட்ட விதைக்கிழங்குகளை, 0.3 சதவீதம் மேங்கோசெப் மற்றும், 0.1 மாலத்தியான் கரைசலில் நனைத்து நிழலில் உலர்த்தி பின் பயன்படுத்த வேண்டும்.
தேர்வு செய்யப்படும் விதைகள், ஒரு மீட்டர் அகலமும், 15 செ.மீ., உயரமும், தேவையான அளவு நீளம் உள்ள, 50 செ.மீ., அமைந்த மேட்டுப்பாத்திகளில் நடவு செய்ய வேண்டும். ஏப்., முதல் வாரத்திலேயே நடவு செய்வது நல்லது. நல்ல நீர்பாசன வசதியுடைய இடங்களில் பிப்., மாதத்தில் இருந்து மார்ச் வரை நடவு செய்யலாம்.
நல்ல மகசூல் அறுவை செய்ய ெஹக்டேருக்கு அடியுரமாக, 75:50:50 கிலோ தழை, மணி, சாம்பல் சத்துக்களில் பயன்படுத்த வேண்டும். மேலும், போரான் - 3 கிலோ, துத்தநாகம் - 5 கிலோ என்றளவில் நுண்ணுாட்ட உரங்கள் பயிருக்கு அளிப்பதன் வாயிலாக, கூடுதல் மகசூல் பெற இயலும்.
மேலும், விதைகளின் முளைப்புத்தன்மையை அதிகரித்து மண்ணில் ஈரத்தன்மையை பாதுகாத்து, மண்ணில் அங்கக தன்மையை அதிகரித்துக்கொடுக்கும் நிலப்போர்வை அமைத்தல் அவசியமாகிறது. 1,320 மி.மீ., முதல், 1,500 மி.மீ., அளவு நீரானது இஞ்சிக்கு தேவைப்படுகிறது.
15 நாட்கள் இடைவெளியில் நீர்பாசனம் செய்து மகசூல் அதிகரிக்க செய்யவேண்டும். களை மேலாண்மை பொறுத்தவரை நிலப்போர்வை அமைப்பதற்கு முன்பாகவும், அதன்பின், 45 -60 நாட்கள் இடைவெளியிலும் களைகள் நீக்கப்பட வேண்டும். அப்போதுகிழங்குகளோ, செடியின் தண்டுப்பகுதியோ பாதிக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
ஒவ்வொரு முறை களை எடுக்கும் போதும் செடிகளுக்கு மண் அனைத்துக்கொடுக்க வேண்டும். இஞ்சி பயிரானது மண்ணில் உள்ள சத்துக்களை அதிகளவில் உபயோகித்து வளரும் பயிர் என்பதால், தொடர்ந்து பல ஆண்டுகளாக பயிரிட்டால் நிலத்தின் தன்மை மாறும். எனவே, பயிர் சுழற்சியில் மரவள்ளி, பீன்ஸ் மற்றும் இதர காய்கறி பயிர்களை பயிரிடலாம்.
மேலும், வாழைத்தோட்டங்களில் ஊடுபயிராகவும் சாகுபடி செய்யலாம். இஞ்சிப்பயிரானது நடவு செய்த எட்டு மாதங்களில் அறுவடைக்கு தயாராகின்றது. இலைகள் பழுத்து கீழிருந்து, மேலாக காய்ந்து வருவது அறுவடைக்கு தயாரானதைகாட்டுகிறது.
இலைகள் முழுவதும் காய்ந்த நிலையில் அறுவடை செய்யப்படுகிறது. சேதமடையாதவாறு மண்ணை கிளறி தோண்டி எடுக்க வேண்டும். நன்றாக பராமரிக்கப்பட்ட பயிரில் இருந்து ெஹக்டேருக்கு சராசரியாக, 15 - 20 டன் இஞ்சி கிழங்குகள் மகசூல் கிடைக்கும்.
அறுவடை செய்யப்பட்ட இஞ்சியை நன்றாக கழுவி, இரண்டு நாட்கள் நிழலில் உலர்த்தி விற்பனைக்கு அனுப்பவும்அல்லது, 55 செல்சியஸ் முதல், 65 செல்சியஸ் வரை ஈரப்பதத்துடன் ஆறு மாதங்கள் வரை சேமித்து வைக்கலாம். இஞ்சி பயிரிட விரும்பும் விவசாயிகள், ஆனைமலை தோட்டக்கலைத்துறையை அணுகலாம். இத்தகவலை ஆனைமலை தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் கோபிநாத் தெரிவித்தார்.